நேபாளத்தில் ஒக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நாட்டில், கடந்த மாதம் வரை, ஒரு நாளில் சுமார் 100 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 10,000 வரை எட்டியுள்ளது. நேபாள சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,127 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 139 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் சுமார் 4000 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் கொரோனா இரண்டாவது அலை இளைஞர்களையே குறிவைத்துள்ளது. நேபாளத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.