“எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ

வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது” என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான “ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

“தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது.

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார்.

“இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக, சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7இல் இழந்தார்.

“அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார்.

“அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர்.

“ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம்.

“இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'பிராந்தியங்களின் ஒன்றியம்' என்ற தீர்வுத் திட்ட வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது.

“இவற்றுக்கு மேலாக 2010 – 2015 வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலமான 2015 – 2019 வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார்.

“விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது.

“அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை.

“சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியல் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே.

“எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது.

“இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்" என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி