தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு
நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், பின்னர் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தினர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கிய மெகா திட்டத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நிகழ்வில் இப்போது கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும்.
இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது.
கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.