“உங்களுடைய தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ் மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன்” எனத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.