தெற்கின் சிங்களத் தலைமைகளால்

இதுவரை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க வடக்கில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் மக்களுக்கு சம உரிமையை வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு நகர்வும் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படாத நிலையில், ஏழு தமிழ் அரசியல் கட்சிகளும் ஏழு தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், "தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு" ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் ஜூலை 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்களும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பில், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர்களான எம். நிலாந்தன் மற்றும் ஏ.ஜதீந்திரா, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான த. வசந்தராஜா, செல்வின் இரேனியஸ் மற்றும் இராசலிங்கம் விக்னேஸ்வரன் ஆகியோரும் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.  

ஒன்பது நிபந்தனைகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் ஜூன் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொது வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படாதவிடத்து, தான் பொது வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆட்சேபனை

'ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை' பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில், ஜூன் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த இலங்கை தமிழ் அரசு கட்சி எம்.பி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

“என்ன முடிவு வரும் என சுவரில் எழுதப்பட்டுவிட்டது. புள்ளிவிபரங்களை வெளியிட விரும்பவில்லை.
தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அனைத்து மக்களும் வாக்களித்தாலும் அது 20 வீதத்தை எட்டாது.
பொது தமிழ் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அவர் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்படும்போது, இது எங்களின் அரசியல் நிலைப்பாடு அல்ல, யாரோ ஒருவரின் கேலிக்கூத்து என சொல்ல இயலுமாக இருக்க வேண்டும். பிரதான தமிழ்க் கட்சியின் உறுப்பினராக நான் இதைச் சொல்கிறேன். எங்கள் கட்சியினருக்கும் சொல்கிறேன்.
மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.”

புறக்கணிப்பு

இலங்கையின் அரச தலைவர் ஒற்றையாட்சியில் நாட்டின் பெரும்பான்மையினருக்காக மாத்திரமே செயற்படுகிறார் என சுட்டிக்காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் செயலாளராகவும் செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி