இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே,
பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், புதைகுழியில் கண்டுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்த நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.
தமது அலுவலகம் விடுத்த கோரிக்கை குறித்து நீதிமன்றம் அவதானம் செலுத்துமென யாழ்ப்பாண நீதவான் கூறியதாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவிக்கின்றார்.
“வருபவர்களுக்கு நீர் ஆகாரங்கள் மற்றும் உளவள ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் சில வேளைகளில் சிலர் வந்து தங்களுடைய தொலைந்த உறவினர்களுடைய சான்று பொருட்களைப் பார்த்து அவர்களுக்கு ஒரு உளவள ஆலோசனை ஒன்று தேவைப்படும் பட்சத்தில் வைத்திய உதவிகள் தேவைப்படும் படசத்தில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக கௌரவ நீதிபதி தெரிவித்தார்.”
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் மனித எலும்புகளுடன் குழந்தை பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு மீட்கப்பட்ட பிற பொருட்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் நாளைய தினம் (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் தகவல் பகிரப்பட்டிருக்கலாம் என தமது அலுவலகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவிக்கின்றார்.
“பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சமர்ப்பித்தோம். எனினும், முதற்கட்டமாக இவ்வாறான காட்சிப்படுத்தல் இடம்பெறுவதாக நீதிபதி தெரிவித்தார். 45 நாட்கள் அகழ்வாய்வுக்கு பின்னர் கண்டெடுக்கப்படும் அனைத்து பிற பொருட்களும் காட்சிப்படுத்தப்படும் பட்சத்தில் பொது மக்களை சென்றடையும் வகையில், முறையான விதத்தில் தகவல்கள் பகிரப்படும் என நீதிபதி அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு கூறப்பட்டுள்ளது.
புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாக சட்டத்தரணி பூரணி மேலும் கூறினார்.
"பொது மக்கள் அதிகம் வந்துபோகக்கூடிய இடத்தில் இந்த காட்சிபடுத்தல் நடைபெற்றிருந்தால் சிறந்ததாக இருக்கும் என பிரேரணையில் சமர்ப்பித்தோம். அத்துடன் சான்று பொருட்களாக எடுக்கப்பட்ட அந்த பொருட்களுக்கு மேலதிகமாக குறித்த பொருட்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நாங்கள் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.”
சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு காட்சிப்படுத்தும்போது, மேலதிகமாக பெண் அதிகாரிகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.
"மேலும், தமிழ் பேசக்கூடிய உத்தியோகத்தர்கள், தமிழ் பேசக்கூடிய குறித்த விடயபரப்புடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் அந்த இடத்தில் காணப்படும் பட்சத்தில், வந்து பார்க்கின்ற நபர்களுக்கு, வருகின்றவர்களுக்கு மேலதிக உதவியாக இருக்குமென நாங்கள் பிரேரணை சமர்ப்பித்துள்ளோம்."
மீட்கப்பட்ட பிற பொருட்கள் காட்சிப்படுத்தலின்போது பங்கேற்கும் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடிக்க, ஒளிப்பதிவு செய்ய ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.