நாடு முழுவதும் குற்றங்கள், போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (03) நடைபெற்றது.
போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் முப்படையினர் தினமும் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனைகளின்போது, 25,870 நபர்கள், 10,423 வாகனங்கள் மற்றும் 7,846 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது, போதைப்பொருள் தொடர்பாக 968 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் மற்றும் 371 பிடியாணை பெற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளின்போது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், குடிபோதையில் வாகனம் செலுத்திய 110 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பொறுப்பற்ற வாகன ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களுக்காக 3,202 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.