யட்டியந்தோட்டை, கிரிபொறுவவத்த
பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 வயது 10 மாத வயதுடைய தேவ்மி அமயா என்ற சிறுமியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கடந்த 16 ஆம் திகதி இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்குள் இந்தக் குற்றம் நடந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் தாயாரே சிறுமியைக் கிணற்றில் வீசி கொலை செய்தது பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் எனவும் அவர் சுகயீனமுற்றிருந்த நிலையில், கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நீதிவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.