மலையக மக்களின் உரிமைகளுக்காக

போராடி உயிர்நீத்த தியாகிகள் தினத்தை பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடிய முல்லோயா கோவிந்தன், பொலிஸ் சார்ஜன்ட் சுரவீரவின் துப்பாக்கி தோட்டாக்களால் கொல்லப்பட்ட தினத்தை மலையக தியாகிகள் தினமாக அறிவிக்குமாறு, ஜூலை 12 ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
 
“தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட தொழிலாளர் உரிமைக்காக அதேபோல் தோட்ட துறைமார்களின் அடக்குமுறைக்கு எதிராக அவர்களுடைய மக்களின் உரிமைக்காக மொழி உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் எமது மலையக சமூகம் ஈடுபட்டுள்ளது. அவ்வாறான போராட்டங்களிலே எங்களது சமூகத்தின்  எதிர்காலத்திற்காக உயிர்நீத்த அந்த தியாகிகளையே நாம் மலையக தியாகிகள் என அடையாளப்படுத்துகின்றோம்.
 
1939ஆம் ஆண்டு சம்பள உயர்வு கோரி முல்லோயாத் தோட்டத்தில் போராட்டம் ஆரம்பமானது. அந்தப் போராட்டம் 1940ஆம் ஆண்டு ஜனவரி வரை இடம்பெற்றது. இதன்போது முல்லோயாத் தோட்டத்தில் ஜனவரி 10ஆம் திகதி அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பொலிாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மலையக தியாகிகள் வரலாற்றை முல்லோயா கோவிந்தன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
 
நாங்கள் இந்த உயரிய சபையில் கேட்கின்றோம் மலையக தொழிலாளர்களது தியாகிகளினது தியாகப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தனுடைய அந்த வீர மரணம் நிகழ்ந்த ஜனவரி 10ஆம் திகதியை இந்த நாட்டிலே மலையக தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென இந்த பிரேரணையை முன்வைக்கின்றேன்."
 
இவ்வாறான நினைவேந்தல் தினத்தை பிரகடனப்படுத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்த கல்வி அமைச்சரும் நாடாளுமன்ற அவைத்தலைவருமான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, குறித்த பிரேரணை உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, தொழில் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
 
“இதனை தொழில் அமைச்சுக்கு அறிவித்து, அமைச்சிடம் இதை முன்மொழிவோம். தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.”
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக நினைவுகூறுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
 
மலையக உரிமைக்குரல் அமைப்பு மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
 
2020ஆம் ஆண்டு முதல் மலையக உரிமைக்குரல் அமைப்பு மற்றும் பிடிதளராதே ஆகிய இரு அமைப்புகளின் முயற்சியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10ஆம் திகதி மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
 
மலையக தியாகிகள் தினம்,  2020 மஸ்கெலியாவிலும், 2021 பத்தனை சந்தியிலும், 2023 கொட்டகலை, கொமர்ஷல் லேக் பகுதியிலும், 2024 கொட்டகலை, கொமர்ஷல் லேக் பகுதியிலும் இடம்பெற்றது. 2022 கொவிட் தொற்றால் நிகழ்வு இடம்பெறவில்லை.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி