நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் சமூகத்தின் பலம் ஜனாதிபதியை

தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் காணி உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும், இயக்கமாகவும் நாங்கள் இருக்க முடியாது.

தமிழ்- முஸ்லிம்  மக்கள் இணைந்து வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இனத்துவ சமநிலை பேணப்பட வேண்டும். தமிழ் சகோதரர்கள் பிரதேச செயலாளர்களாக இருந்தால் முஸ்லிம் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும்.

அதுபோன்று முஸ்லிம் சகோதரர் ஒருவர் பிரதேச செயலாளராக இருந்தால் தமிழ் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும். இன்னும் கதைத்து கதைத்து காலத்தை கழிக்க முடியாது.

உடனடியாக செயலில் இறங்க வேண்டிய நேரத்தில் உள்ளோம். மக்களது உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் எப்போதும் கரிசனையுடனையே உள்ளோம் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் நாவிதன்வெளி அமீரலி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

எங்கள் மண்ணின் வளங்களை பயன்படுத்தி எத்தனை தொழிற்பேட்டைகளை உருவாக்கப் போகிறீர்கள் என ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்போம்.

அவர்களை ஆதரிக்க முன்னர் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கப்போகிறீர்கள் என்று கேட்போம். 

எங்களின் மூதாதையர்கள், தாய் தந்தைகள் தந்த நிலங்களுக்கு உரிமை கேட்க பிரதேச செயலகங்களில் பிச்சை பாத்திரம் சுமக்கும் சமூகமாக நாம் இருக்க முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒருவர் அமைச்சராகவும், நால்வர் பிரதி அமைச்சராகவும் உருவாகும் இயக்கமல்ல.

எங்களின் பலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியைத் தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் நிலத்தின் உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும் இயக்கமாகவும் நாங்கள் இருக்க முடியாது.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளோ, முஸ்லிம் சமூகத்தினரோ தளர்ந்து விடக்கூடாது.

இன்னும் நமது மண்ணில் நாம் உரிமைகளை  வென்றவர்களாக கௌரவத்துடன் வாழ வேண்டிய கட்டத்துக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி