கரந்தெனிய வைத்திய அதிகாரி
அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமாரவை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் பாதாள உலகின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி பெற்றவர் என நம்பப்படும் நபர் ஒருவர், படோவிட்ட கல்கிஸ்ஸ பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் கல்கிஸ்ஸ தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக பொது சுகாதார பரிசோதகரை சுடுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி, மகசீன் மற்றும் பத்து தோட்டாக்கள் என்பன சந்தேக நபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பதிலாக பொதுச் சுகாதார பரிசோதகர் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகரைக் கொன்ற பின்னர், ஊரகஸ்மன்ஹந்திய கல்பொத்தவல பிரதேசத்தில் வீடொன்றில் இருபது நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் தம்பதியினரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலக துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையிலேயே தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள், கறுப்பு ஜக்கெட் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
2200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை தடுத்து வைத்து விசாரணை நடத்தியதில் அவர் பாதாள உலகில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் தெரிய வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகரின் வீடு அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய எட்டு இலட்சம் ரூபா பண ஒப்பந்தம் இந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. துபாய் நாட்டில் உள்ள பாதாள உலகத் தலைவன் ஒருவனே இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.