ஜனாதிபதி ஆட்சியையோ அரசியல்

சாசனத்தையோ நிறுத்தி வைப்பது தமது நோக்கம் அல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோர் உயர்  நீதிமன்றத்தில் நேற்று (27) இவ்வாறு தெரிவித்தனர்.
 
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ள மனுவில் தலையிட அனுமதி கோரி பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
 
இந்த மனுக்கள் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ்  முன்னிலையில் அழைக்கப்பட்டது.
 
மேலும், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை கவனமாக பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
 
தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் மாஹிம் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
 
இந்த மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குறித்த உத்தரவை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
 
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, இந்த மனுக்களை விரைவாக விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.
 
விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
 
மனுக்கள் மீதான விசாரணைக்கு திகதியை நிர்ணயித்த நீதிமன்றம், மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை, மறுப்பு மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.
 
பிரதம நீதியரசர் தவிர்ந்த ஏனைய நீதிபதிகளின் பதவிகளுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுத்து ஜனாதிபதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நிறைவேற்று அதிகாரங்களில் உயர் நீதிமன்றம் தலையிடுவதாக பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக அமைச்சர்களான விஜயதாச ராஜபக்க்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் நீதிபதிகள் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, இந்த மனு மீதான விசாரணையில் தலையிட அனுமதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.
 
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய மற்றும் டிலான் பிலிப் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
 
அரசியல் நிர்ணய சபையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம். ஏ. சுமந்திரன், கனக ஈஸ்வரன் ஆகியோர் தோன்றினர்.
 
சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா ஆஜரானார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி