ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை

இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நட்டமீட்டிவரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

பல தசப்தங்களுக்கு முன்பு எமக்கான தனித்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை, எமிரேட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டபோது 30 மில்லியன் இலாபமீட்டியிருந்தது. அதன் பின்னரான காலப்பகுதியில் எவ்வித இலாபங்களையும் ஈட்டவில்லை என்றும் தெரிவித்தார்.   

ஒருநாளும் விமானங்களை கண்டிராத மற்றும் விமானங்களில் காலடி வைக்க முடியாமல் இருக்கும் சாதாரண மக்களின் பணத்தினாலேயே இந்தச் சேவைகள் நடத்தப்படுகின்றன. 

எமக்கென்ற தனியொரு விமான சேவை இருப்பது பெருமைக்குரியதாக இருந்தாலும்  அதனை நடத்திச் செல்வதற்கு வழங்கப்படும் செலவு மிக அதிகமானதாக உள்ளதெனவும் தெரிவித்தார்.  

இன்றளவில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளது. 

சர்வதேச பிணைமுறிகளின் கீழ் குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களுக்கான கடன் தொகையை உள்நாட்டு வங்கிகள் உள்ளடங்களான சில நிறுவனங்களே செலுத்தியுள்ளன என்றும், எரிபொருள் கடனையும் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், கடன் நெருக்கடிக்கு மத்தியில் விமானச் சேவையொன்றை நடத்திச் செல்வது சாத்தியமற்றதெனவும் சுட்டிக்காட்டினார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு  போதாமை உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக முன்பை போன்று அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. 

அவ்வாறு வழங்குவதும் நியாயமற்றது என்பதாலேயே ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதன்படி 51 சதவீதத்தினை அரசிடம் தக்கவைத்துக்கொண்டு மிகுதியான  49 சதவீதத்தியைனே மறுசீரமைப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் யோசனைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது. 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுனத்தின் கீழான இறங்குதுறை பணிகள் மற்றும் உணவு வழங்கல் நிறுவனம் ஆகியன வருமானம் ஈட்டுகின்றன. இருப்பினும் அதனால் விமானச் சேவையின் நட்டத்தை ஈடு செய்ய முடியாதுள்ளது என்றும் தெரிவித்தார்.  

அதனால் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டுமா என்பது பற்றியும் இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனைகள் பற்றியும் சர்வதேச நிதி நிபுணத்துவம் கொண்டவர்களின் ஆலோசணைகள் பெற்றுக்கொள்வதற்காக சமர்பிக்கப்பட்டுள்ளன. 

மேற்படிச் செயற்பாடுகளை  மிகவும்  வெளிப்படைத் தன்மை மிக்கதாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.   

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை  மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தச் செயற்பாடுகளின் பின்னர் அதன் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொண்டு உரிய முதலீடுகளுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்

அதன் பின்னர் அதன் மேலதிக அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அதனை செய்யத் தவறினால் அந்த நிறுவனத்தின் 6000 ஊழியர்கள் தொழிலை இழக்கும் நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்தார். 

கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் உலகின் அனைத்து நாடுகளினதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சுற்றுலாப் பிரயாணிகளுக்கும் நாடுகளுக்கு வரவில்லை. சில நாடுகள் விமானங்களை விமான நிலையங்குள்ளேயே தரித்து வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 

அதற்கு மத்தியில் கட்டார் விமானச் சேவையின் விமானிகள் 70 பேர் பணி நீக்கப்பட்டனர். இருப்பினும் எமது விமான சேவை ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

விமானிகள் வீடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையிலான மனிதாபிமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. 

கொவிட் தொற்றின் பின்னர் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன. அந்தச் செயற்பாடுகள் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைக்கு தடையை தடுத்திருந்தது எவ்வாறாயினும் அந்த அனைத்து நிலைமைகளையும் சீரமைத்த பின்னர் விமானச் சேவையை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதனால் நாளாந்தம் பெருமளவான சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி