ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானம் மிகமுக்கிய நகர்வாகும் என அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.


வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தலைமையில் பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச்செயலர் அமன்டா ஜே டொரி மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டொனால்ட் லூ உள்ளிட்ட மூவரடங்கிய உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்தது.

குறித்த அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவிற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு முதன்முதலாக வருகைதந்துள்ளமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நீண்டகாலத்தின் பின்னர் இத்தகைய கலந்துரையாடலை மேற்கொள்ளமுடிந்தமையும் மகிழ்ச்சியளிக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின்போது நாம் இலங்கைக்கு தடுப்பூசிகளையும் சிகிச்சைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களையும் வழங்கியிருந்தோம்.

அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் மிகச்சிறந்த பங்காளி (நட்புநாடு) என்ற வகையில் தற்போதைய நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். சட்டத்திற்கு அமைவான சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதென்பது எமது இரு நாடுகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அதேவேளை இலங்கையை வலுவான ஜனநாயகத்தைக்கொண்ட, சுபீட்சமான நாடாகக் கட்டியெழுப்புவதற்கு விரும்புகின்றோம். அந்தவகையில் நாட்டின் அமைதி, நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் பேசினேன்.

அதேபோன்று நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இருப்பினும் அதற்கு அப்பால் செய்யவேண்டிய மேலும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் (ஜீ.எல்.பீரிஸ்) நன்கு புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

மேலும் ஜனாதிபதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச் சந்திப்பதற்குத் தீர்மானித்துள்ளமை மிகமுக்கிய நகர்வு என்பதுடன் வரவேற்கத்தக்க விடயமாகும். அடுத்ததாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறை உருவாக்கம் தொடர்பிலும் நாம் கலந்துரையாடியதுடன் தென்னாபிரிக்காவினால் பின்பற்றப்பட்ட பொறிமுறை உள்ளடங்கலாக இச்செயன்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய நாடுகளைப் பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முற்படுகின்றமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

மறபுறம் அரச சார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புக்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல் நடவடிக்கைகள் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும். மாகாணசபைத்தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுவதையும் நாம் ஊக்குவிக்கின்றோம். நீதியமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் இணைந்து தேசிய ரீதியில் கடந்தகால வடுக்களை ஆற்றுவதற்கு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவை.

அடுத்ததாக இருநாடுகளுக்கும் இடையிலான கடற்பிராந்தியத்தொடர்புகள், இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகள், பொருளாதார ரீதியான தொடர்கள் உள்ளிட்ட அனைத்தையும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதுடன் அதுகுறித்தும் கலந்துரையாடினோம்.

குறிப்பாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆடையுற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதி என்பன இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களில் முக்கியமானதாகும். அத்தோடு தகவல் தொழில்நுட்பம், சூழலுக்கு நேயமான சக்திவலு உற்பத்தி ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். குறிப்பாக பெண்களால் முன்னெடுக்கப்படும் சிறிய வணிக முயற்சிகளை ஊக்குவிப்பது குறித்தும் எமது சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் உக்ரேன் மீது ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் படையெடுப் பைக் கண்டனம் செய்வதுடன், ரஷ்யா உட்பட வேறெந்த நாடுகள் இவ்வாறான ஜனநாயகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், ஜனநாயகத்தை உறுதிசெய்யும் வகையில் அவற்றுக்கு எதிரான நாமனைவரும் ஒன்றுபடவேண்டியது அவசியமாகும். இறுதியாக எதிர்வரும் மாதங்களில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை வொஷிங்டனில் சந்திப்பதற்கு எதிர்பார்க்கின்றேன் என்றார்.

-நன்றி வீரகேசரி

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி