பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக 10 க்கும் மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு ,சாய்ந்தமருது ,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று , ஆலையடிவேம்பு, திருக்கோவில், இறக்காமம், உகண , பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள் தடைப்பட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன் இந்த வீதி ஊடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும் காரைதீவு பிரதேச செயலகத்தையும் இணைக்கின்ற மாவடிப்பள்ளி பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்விரு பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள இலங்கை கடற்படை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.