10ஆவது பாராளுமன்றத்தின்
ஆரம்ப அமர்வின்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து யாழ்.மாவட்டபாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பைக் கோரியுள்ளார்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின்போது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை காலி செய்ய இவர் மறுத்ததோடு இனவாதக் கருத்துக்களையும் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன், குறித்த சம்பவம் காரணமாக தமக்கு கடும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லை. ஊடகங்கள் என்னிடம் 45-50 நிமிட பேட்டி எடுக்கின்றன.
சாப்பிட்டுவிட்டீர்களா என்று கேட்டதற்கு, ஆம் என்றேன். பின்னர் நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் அங்கத்தினரா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு நான் பதிலளிக்கவில்லை. ஆனால் இரண்டாவது கேள்விக்கு நான் பதிலளிக்காமல் இருந்ததனைத் தவிர்த்து விட்டனர், மேலும் என்னால் வீதியில்செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன் எனக் கூறினார்.
நிலைமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தமக்கு வழங்கப்படும் பாதுகாப்பு எவ்வாறு எப்போது ஏற்பாடு செய்யப்படும் என நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.