நவம்பர் 27ஆம் திகதி அனுசரிக்கப்படும்
மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் விஜேபால, நாட்டின் சட்டத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கில் பொதுமக்கள் நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்கவில்லை.
எவ்வாறாயினும், நினைவேந்தல்களை நடத்தும்போது சட்டங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.
வடக்கு மக்களால் அனுசரிக்கப்படும் கடந்த கால நினைவேந்தல்களுக்கு பல்வேறு வியாக்கியானங்களை வழங்க சில குழுக்கள் அடிக்கடி முயற்சித்ததாக குறிப்பிட்ட அமைச்சர் விஜேபால, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.