ஐக்கிய மக்கள் சக்தியின்
தேசிய பட்டியலில் எஞ்சியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் ஏலவே உள்வாங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மீதமுள்ள நான்கு தேசியப் பதவிகள் இன்னும் பெயரிடப்படவில்லை. அதற்காக டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், சுஜீவ சேனசிங்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர எமது கூட்டுக் கட்சிகள் இரண்டினது இருவரின் பெயரும் தேசியப்பட்டியலுக்கு குறித்த கட்சிகளின் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை முன்னைய பாராளுமன்றத்துக்கு உள்வாங்க 11 மாதங்கள் எடுத்ததாக கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எனவே, எமது கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை உரிய நேரத்தில் நியமிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.