தேர்தலில் தோல்வியடைந்த
ஒருவர் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மீறி சாதனை படைக்கும் நமது நாட்டில், தோல்வியடைந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் இப்படி ஒரு தோல்வி வேட்பாளர் வாக்குறுதியை நிறைவேற்றுவது பாராட்டத்தக்கது. அதற்காகத் தன் சொந்தப் பணத்தைச செலவு செய்துள்ளார்.
அவர்தான் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல் சப்ரி ஆவார்.
இவர் முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு இலவச டயர்களை வழங்குவதாக அவர் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர் அண்மையில் 200 முச்சக்கர வண்டிகளுக்கு டயர்களை வழங்கியதாக கடந்த வார இறுதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஒரு முச்சக்கர வண்டிக்கு குறைந்தது மூன்று டயர்கள் கொடுக்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், குறைந்தது 600 டயர்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். சந்தையில் வெவ்வேறு விலைகள் இருந்தாலும், ஒரு டயர் சுமார. 10,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அறுபது இலட்சம் ரூபா (6,000,000) அல்லது 6 மில்லியன் செலவிட்டிருக்க வேண்டும்.
இந்த நன்கொடையை பெற்றுக் கொண்ட அப்பகுதி முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். அவருக்கு வாக்களிக்காததற்கு அவர்கள் வருத்தப்படலாம். மீண்டும் தேர்தல் நடந்தால் மாகாண சபைகள் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கலாம்.