யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள்
ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த தற்கொலைக்கு வழிவகுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி, இன்று காலை யட்டினுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் இரண்டு மாடி வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.
வீட்டின் பின்புறம் கட்டப்பட்ட ஒரு தற்காலிக இடத்தில் பிரதேச சபை உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே நேரத்தில் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களில் உள்ள இரண்டு அறைகளில் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இருப்பினும், மனைவி மற்றும் மகளின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், முதல்நாள் இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு ஏதோ ஒரு வகையான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அவர்களின் கழுத்தை நெரித்து பிரதேச சபை உறுப்பினர் கொன்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பிரதேச சபை உறுப்பினரின் இளைய மகளுக்கு 12 வயது என்றும், சம்பவ தினத்திற்கு முன்தினம் கல்வி சுற்றுலாவிற்கு சென்று நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது தந்தை சில மாத்திரைகளையும் சாப்பிடக் கொடுத்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அதிகாலையில் தன்னை கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்து எழுந்ததாகவும், தனது தந்தை கையில் கம்பியைப் பிடித்திருப்பதைக் கண்டதாகவும், அந்த நேரத்தில், தனது தந்தை தன்னை கட்டிப்பிடித்து அணைத்ததாகவும் இளைய மகள் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
பின்னர் தனது தந்தை குளியலறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ள நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு, குறட்டை சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்றபோது, தனது தந்தை தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டதாகவும் சிறுமி கூறினார்.
மேலதிக விசாரணைகளின் போது, இறந்த பிரதேச சபை உறுப்பினர் சம்பிக்க நிலந்த எழுதியதாகக் கூறப்படும் 4 பக்கக் கடிதம் ஒன்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
"விஜேசிங்கே, உன்னை சபிக்கிறேன். நீ எப்போதும் என்னைக் கொலை செய்வதாக மிரட்டி, வீட்டை விற்க முடியாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறாய். ஒரு நாள் என் மகளின் பாடசாலைக்கு அருகில் வந்து மகளுடன் இருந்தபோது, என் காலரைப் பிடித்து வீட்டிற்கு வந்து கையெழுத்திடச் சொன்னான். நான் கையெழுத்திட முடியாது என்று சொன்னதும், அவன் என் தலையில் இரும்பினால் அடித்தான். என் நெற்றியில் அந்த வடு இன்னும் இருக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணையை கண்டி நீதவான் சாமர விக்ரமநாயக்க மேற்கொண்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கண்டி, யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் சமையலறைக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அவர் தூக்கில் தொங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திகில்ருக்ஷி ஜெயலத் குமாரகே என்ற 45 வயதுடைய மனைவிக்கும் 17 வயதுடைய ஷிஹாரா அஷின்சானி ஹபுகோடா என்ற மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தின் இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்றிருந்தார். அவர் இரவில் வந்திருந்தார். சம்பிக்க நிலந்த பாடசாலையில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
எனினும் அதற்குள், அவர் ஏற்கனவே தனது மனைவியையும் மற்ற மகளையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தனது இளைய மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர், அவரை கொல்லும் நோக்கத்துடன் மாடிக்குச் சென்றிருந்தார், ஆனால் மகள் அந்த நேரத்தில் உறங்காததால் முடிவை கைவிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலில் நுழைந்து சிறிது காலம் யட்டினுவர பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய சம்பிக்க நிலந்த, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்று யட்டினுவர பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.
மார்ச் மாதம் தனது காரை விற்று வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து அவர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு வழங்க 5 லட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்தாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் நெருங்கிய உறவினரான மினெல் ஹப்புகொட என்ற பெண் தகவல் வழங்கியுள்ளார். “உயிரிழந்தவர்கள் எனது சித்தியும் சித்தப்பாவும் அவரது மகளுமாகும். மிகவும் அன்பாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக, சித்தப்பா ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்.
அவர் ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பதை என் தந்தையும் அறிவார். ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.