பொது பாதுகாப்பு மற்றும்
பாதுகாப்பு மிக முக்கியமான கடமையாகப் பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி, நாட்டில் வாழும் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக, 'அனைத்து குற்றங்கள், தவறான செயல்கள், பொதுத் துன்புறுத்தல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல் மற்றும் அமைதியைப் பேணுதல்' போன்ற கடமைகள் மற்றும் பொறுப்புகள் பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புள்ள அதிகாரிகள் பெரும்பாலும் பொது மக்களால் மதிக்கப்படுவதுடன் விமர்சிக்கவும்படுகிறார்கள்.
சமீப காலமாக பொலிஸ்துறை மீதான குற்றச்சாட்டுகள்
பொலிஸாரில் சில அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய சம்பவங்கள் ஏராளம். பல்வேறு சந்தர்ப்பங்களில் தாங்கள் எதிர்கொள்ள நேர்ந்த இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்வது வழமை.
மேலும், சந்தேக நபர்களை விசாரிக்கும்போது சில பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா (கிளப் வசந்த) மற்றும் மற்றுமொரு நபரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளரை பொலிஸார் விசாரணை செய்யும் காணொளி (ஜூலை 10) நாட்டின் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது. இது நாட்டில் பெரிய பேசு பொருளாக காணப்பட்டது.
மேலும், கடந்த ஜூலை மாதம் கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் போக்குவரத்து சோதனையின்போது, போதைப்பொருள் பொதி ஒன்றை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவொன்றை கைது செய்ய முயற்சித்ததாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் காணப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
மேலும், பல்வேறு பொய் வழக்குகளில் ஆட்களைக் கைது செய்து விசாரணை நடத்துவது, கைது செய்யப்படுபவர்களை தாக்கி சித்திரவதை செய்வது, பொலிஸ் காவலில் இருக்கும் போது மரணம் என பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னரை விட தற்போது பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்கமின்மை நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுத்ததன் காரணம் என்ன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவவிடம் பிபிசி சிங்கள சேவை கேட்டுள்ளது.
அதற்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், “தவறு செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 298 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
“ஒட்டுமொத்த சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பொலிஸ் அதிகாரிகளும் இந்தச் சம்பவங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, கடந்த 28 நாட்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.