தேரர் ஒருவரின் பொய்யான
தகவலை நம்பிய பொலிஸார், முஸ்லிம் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புல்மோட்டை பொன்மலைக்குடா கிராம மக்கள் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி காலை பொன்மலைக்குடாவில் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.
இதன்போது, குச்சவெளி பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று இந்தக் காணி தொல்லியல் துறைக்குச் சொந்தமான காணி என்பதால் இங்கு அடக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
குறித்த காணி தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது குறித்த தேரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தாம் வந்ததாகவும் பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்தக் காணி முஸ்லிம்களின் மையவாடி என பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்த அப்பகுதி முஸ்லிம்கள், எத்தனை தடைகள் வந்தாலும் இஸ்லாமிய முறைப்படி அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்வோம் என அனைவரும் ஒன்றிணைந்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மாகாண செயலாளரின் அறிவித்தலை அடுத்து பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.