அதிகார பகிர்வு விவகாரம் தொடர்பாக அரசாங்கம் தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அல்லது அதனை ரத்து செய்யவேண்டும் என்றும்
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் முறையாக பகிரப்படாமல், அது வெறும் 'வெள்ளை யானை' என சித்தரிக்கப்படுவது நியாயமானதல்ல.
“வடகிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோன்றும் என்ற பெயரில் மாகாண அதிகாரங்களை மறுக்கும் நிலை தவறானது என்றும், இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும்.
“அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது நியாயமற்றது. மூன்று தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“தேர்தலை தாமதிக்க அரசாங்கம் சட்டமா அதிபரை பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மாகாணங்களுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி விசேட அவதானம் செலுத்தப்படுகிறது.
“அதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கு வழங்கினால் அது அரசியல்மயப்படுத்தப்படும் என்பது உறுதி. எனவே, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கண்காணிக்க தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் காணி ஆணைக்குழு ஊடாக விசேட வழிமுறையை செயற்படுத்த வேண்டும்.
“மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முடியுமாயின் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமன அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றேன்” என்றார்.