திருகோணமலை சாஹிரா கல்லுாரி

மாணவிகளின் உயர்தரப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்  பதியுதீன் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (04) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மேலு கூறியதாவது,
 
“பெண்களின் உரிமைகள் மற்றும் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இதற்காக உழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே,  தலதா அத்துகோரள, ரோகிணி கவிரத்ன, கீதா குமாரசிங்க ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
 
இந்த நாட்டின் பிரதமராக மற்றும்  ஜனாதிபதியாக பெண்கள் இருந்திருக்கின்றனர். உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, சிறந்த முறையில் ஆட்சி செய்திருக்கின்றார்கள். எனினும், தற்போது நமது நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 
 
எமது இஸ்லாம் மார்க்கத்தில், பெண்களின் உரிமை தொடர்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கண்டிப்பான, கரிசனை காட்டியிருக்கின்றது. எனினும், சர்வதேச நாடுகளில் இஸ்லாம் மீதான அபாண்டங்கள் பரப்பப்படுவதுடன், பெண்களை இஸ்லாம் துன்புறுத்துவதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் பிழையான தரவுகள் பரப்பப்படுகின்றன. சர்வதேச ஊடகங்கள் இதனை திட்டமிட்டுச் செய்கின்றன.
 
அதேபோன்று, இலங்கையில் முஸ்லிம்களுக்கான விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு, அரச சார்பற்ற நிறுவனங்கள் அதனை பேசுபொருளாக்கியுள்ளது. இதனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சில திருத்தங்களை சமர்ப்பித்தோம்.  
 
எனினும், இதுவரையில் அந்தச் சட்டம் திருத்தப்பட்டு சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, நீதி அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
 
அதேபோன்று, வெளிநாடுகளுக்கு பெண்கள் வேலைக்கு செல்வதால், அவர்களின் குடும்பம் மற்றும் பிள்ளைகள் சீரழிகின்றனர். எனவே, இதற்கு திட்டமிடப்பட்ட ஒழுங்குவிதிகளை மேற்கொண்டு, முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகின்றேன்.
 
மேலும், பெண்களை கல்விரீதியாக, சமூகரீதியாக, அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக வலுவூட்ட வேண்டிய தேவை நிறையவே காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை என்ற விடயம் பலராலும் சிலாகிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தற்பொழுது கல்வித் துறையில் உயர்வடைந்து, உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
 
அந்த வகையில், கடந்த 31ஆம் திகதி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. பலர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற முடியாதவர்கள் முயற்சிகளை கைவிடாது, தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும்.
 
அத்துடன், திருகோணமலை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்று, சென் ஜோசப் கல்லூரியில் உயர்தரப் பரீட்சை எழுதிய 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 
 
இந்த விவகாரம் தொடர்பில், எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் ஊடாக உண்மை நிலையை விசாரித்தேன். இது குறித்து, ஸாஹிரா கல்லூரி அதிபர் முகைசுடனும் உரையாடினேன். பாதிக்கப்பட்ட மாணவியொருவர்  மற்றும் பெற்றோருடனும் பேசினேன். இது ஒரு திட்டமிட்ட சதியாகவே எமக்கு புலப்படுகின்றது.
 
ஏற்கனவே, திருமலை மாவட்ட பாடசாலையொன்றில் ஆசிரியையின் அபாயா  பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தபோது, நீதிமன்றம் பாடசாலை நிர்வாகத்தை எச்சரித்தமை நாடறிந்த விடயம்.
 
இந்தப் பின்னணியில், 70 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை (5) தொடக்கம் பரீட்சை வினாத்தாள்கள் மீளாய்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாணவிகளுக்கு மீளாய்வுக்கான சந்தர்ப்பமும் இல்லாமல்போகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த மாணவிகள் பர்தா அணிந்து வந்தார்கள் என்ற காரணத்திற்காகவே இவ்வாறு பரீட்சை பெறுபேறுகளை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.
 
அங்கிருந்த அதிகாரிகள் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  பரீட்சை எழுதும்போது காதுகளை காட்டுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில் 70 மாணவிகளுக்கும் பொறுப்பதிகாரிகள் பர்தாவினை விளக்கி, அவர்களின் காதுகளை காட்டுமாறு கூறியபோது, மாணவிகள் அதனை செய்துவிட்டே பரீட்சை எழுதியிருக்கின்றார்கள். 
 
பரீட்சை நடைபெற்ற காலங்களில், அதிகாரிகள் மாணவிகளிடம் “பரீட்சை பெறுபேறுகள் வெளிவராது என்றும் தெரிவித்துள்ளனர். மாணவிகள் சுதந்திரமாக பரீட்சை எழுதுவதை இவர்கள் தடைசெய்துள்ளனர்.
 
அதன் பின்னர், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மாணவிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளின் போது, பரீட்சை ஆணையாளர் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய நாங்கள் கட்டுப்படுவோம் என கையொப்பமிடுமாறு மாணவிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கையொப்பமும் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் பெறுபேறுகள் வெளியாகவில்லை.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இது தொடர்பில் நான் முறையிட்டுள்ளேன். இன்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்காவிடமும் இந்த விடயத்தை பிரஸ்தாபித்தேன்.
 
பெண் உரிமை தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வேளையில், பெண்கள் பர்தா அணிவதை பிழையாகக் கருதி,  பரீட்சை பெறுபேறுகளை இடைநிறுத்தி வைப்பது, எந்த வகையில் நியாயம்? எனக் கேட்கின்றேன்.
 
ஆகையால், ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாமல், மாணவிகள் படும் வேதனைகளை மனதில் நிறுத்தி, அவசரமாக பெறுபேறுகளை வெளியிடுமாறு  இந்த உயர் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார். 
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி