எதிர்க்கட்சிகளாக இருக்கும் வரைக்கும் உவப்பாக இருக்கும் உரிமைப் போராட்டங்கள்,

மனித உரிமைக் கோரிக்கைகள், கருத்துச் சுதந்திரத்துக்கான வெளி உள்ளிட்ட ஜனநாயக அம்சங்கள் எல்லாமும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால்  கசப்பாக மாறிவிடுகின்றன. இதற்கு, அநுர குமார திசாநாயக்கவும், அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கூட விதிவிலக்கல்ல என்பதை நாளும் பொழுதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மே  தினத்தன்றே, ஜனாதிபதியும் அவரது ஊடகப் பிரிவும் ஜனநாயகப் போராட்டங்கள் மீதும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கூறான ஊடக சுதந்திரத்தின் மீதும் அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கான  செயற்பாடுகளைப் புரிந்திருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம், கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது. 'அரகலய' போராட்டத்தின் பின்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ரணில், காலி முகத்திடலில் அரசியல் சார் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்திருந்தார். தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததும், ஆளுங்கட்சியாக தன்னுடைய முதல் மே தினக் கூட்டத்தை,  இலட்சக்கணக்கானவர்களின் பங்களிப்போடு காலிமுகத் திடலில் நடத்தியது. அந்த நிகழ்வில் உரையாற்றிய அநுர, "...தொழிற்சங்கங்கள் தங்களின் பழைய மனப்பான்மையை கைவிட வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். அற்ப விடயங்களுக்காக போராடக் கூடாது.." என்று கூறினார். தேசிய மக்கள் சக்தியின் உண்மையான முகமான மக்கள் விடுதலை முன்னணி எனும் ஜே.வி.பி, அதிகார அடக்குமுறைகள், வர்க்க பேதங்களுக்கு எதிராக ஐம்பதுகளுக்கும் அதிகமான ஆண்டு கால போராட்ட வரலாற்றைக் கொண்டது. ராஜபக்ஷக்களுக்கு எதிராக நாட்டு மக்கள் நடத்திய 'அரகலய'வின் விளைவில் பிறந்ததுதான், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாட்டில் அதிகளவான தொழிற்சங்கப் போராட்டங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் போராட்டங்கள், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்கள் என்று வருடமொன்றில் அரைவாசிக் காலம் ஜே.வி.பி. போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. அதுதான்,பல ஆண்டுகளாக தென் இலங்கையில் 5 வீதமான வாக்குகளைப் பெற்று வந்தாலும் ஜே.வி.பி.யை தக்க வைத்தது. குறிப்பாக, அந்தக் கட்சி தேர்தல்களில் மூன்று நான்கு பாராளுமன்ற ஆசனங்களைத்தான் கடந்த காலத்தில் வென்றிருந்தாலும், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக ஒன்றியங்கள் என்று போராட்டங்களை பாரியளவில் நடத்துவதற்கான ஆளணியைக் கொண்ட தரப்புக்களுக்குள் ஆளுகை செலுத்தி வந்திருக்கின்றது. ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தியாக மாறிய பின்னரும்கூட அவர்களை தென் இலங்கை ஆரம்பத்தில் சீண்டவேயில்லை. ராஜபக்ஷக்களுக்கு எதிரான 'அரகலய' கோபம், நாட்டை மாறிமாறி ஆண்ட பாரம்பரியக் கட்சிகள் அனைத்தின் மீதான கோபமாகவும் கடந்த இரு தேர்தல்களிலும் பிரதிபலித்தது. அதுதான், அநுர அலையாக மாறியது. தேசிய மக்கள் சக்தியை கரை சேர்த்தது. அப்படியான நிலையில்தான், அநுரவுக்கும், அவரது தோழர்களுக்கும் ஆட்சிக்கு வந்ததும், ஜனநாயகப் போராட்டங்கள் எல்லாமும் எரிச்சலூட்டுகின்றன.

தொழிற்சங்கங்கள் தங்களின் பழைய மனப்பான்மையைக் கைவிட வேண்டும், அற்ப விடயங்களுக்காக போராடக்கூடாது என்று அநுர கூறத் தலைப்படுவது, கடந்த காலத்தில் தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களை அற்ப காரணங்களை முன்வைத்து அவரும் நடத்தியிருக்கிறார் என்ற பொருளில் கொள்ள முடியும். ஏனெனில், ஜே.வி.பி கடந்த காலங்களில் மக்களை அசௌகரியப்படுத்தும் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றது. அதில், ஆயுத மோதல்களை மீண்டும் ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கும் இறுதிப் போருக்கு வித்திட்டதும் அடங்கும். அதுபோல, கொழும்பு நகரத்தில் சாதாரண மக்களின் பயணத் தடங்களான தொடரூந்து பயணங்கள், பேரூந்துப் போக்குவரத்துக்களை முடக்கி, மக்களை அலைக்கழித்திருக்கின்றது. இவற்றை எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து, கடந்த காலத்தில் அநுர தலைமையேற்று நடத்தினார் என்று தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சி அதிகாரத்தை அடையும் வரைக்கும்தான் நீங்கள் என்னுடைய சகோதராயக்களும் தோழர்களும், அதன்பின்னர் நீங்கள் எல்லோரும் எதிரிகள் என்ற தோரணையில் அவர் அதிகாரம் கலந்த தொனியை மே தின உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேவேளை, அநுரவின் மே தின உரையை படம் பிடித்து சமூக ஊடகத்தில் படமொன்றை பகிர்ந்தமைக்காக புகைப்பட ஊடகவியலாளரான லஹிரு ஹர்ஷன, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பொதுக்கூட்ட மேடையொன்றில் அவரும் பவித்திரா வன்னியாரச்சியும் பேசிக் கொண்டிருக்கும் படத்தினை வெளியிட்ட ஊடகவியலாளர் அப்போது ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்தவர்களினால் அச்சுறுத்தப்பட்டார். ராஜபக்ஷ காலத்தினருக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, அநுரவின் ஆட்களும் நிரூபிக்கின்றார்கள். ராஜபக்ஷ - பவித்திரா படத்திலாவது சற்று அஷ்டக்கோணலான விடயம் இருப்பதாக கொள்ள முடியும். ஆனால், அநுர இரு கைகளையும் வானத்தை நோக்கி வைத்துக் கொண்டிருப்பது மாதிரியான படமொன்றை பகிர்ந்தமைக்காக லஹிரு ஹர்ஷன மிரட்டப்பட்டிருக்கின்றார் என்றால், அதனை எப்படி எதிர்கொள்வது. ஹிட்லர், தன்னுடைய அரசியல் பிரச்சாரங்களை படம் பிடிப்பதற்காக பிரத்தியேக புகைப்படக் கலைஞரை வைத்து, பல அதிகார தோரணை உடல்மொழியோடு படங்களை எடுத்து, காட்சிப் பலகைகள், பத்திரிகை விளம்பரங்களில் பாவிப்பார். சற்று அஷ்டக்கோணலாக அல்லது அவரை சற்று பலமற்றவராக சித்தரிக்கும் படங்களைப் பிரசுரித்தால், அவர்களுக்கு எதிராக தன்னுடைய அதிகார அத்துமீறல்களைப் புரிந்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே தோரணையிலான ஒரு விடயத்தைத்தான் அநுரவின் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரும் புரிந்திருக்கிறார்கள். ஏனெனில், அநுர,தன்னால் ஏதும் முடியவில்லை. இறைவா ஏதாவது கொடு என்று இறைஞ்சுவது போல, அந்தப் படத்தினை  ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் அர்த்தப்படுத்திக் கொண்டார்களோ தெரியவில்லை. இல்லையென்றால், ஒரு படத்தின் மீதும் ஏன் இவ்வளவு கோபம். அதனால், ஊடக சுதந்திரத்தின் மீது அச்சுறுத்தல் விடுக்கும் நிலைக்கு என் செல்ல வேண்டும்?

இன்னொரு பக்கம், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக எழுந்து இன்றைக்கு தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கும் லக்மாலி ஹேமச்சந்திரவும், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட செயற்பாட்டு தளத்தினரை நோக்கி அச்சுறுத்தல் விடுக்கும் பேஸ்புக் பதிவொன்றை அண்மையில் விடுத்திருந்தார். "நாட்டு மக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினைப் பெற்று ஆட்சியில் இருக்கும் அரசாங்தோடு அனைவரும் இணைந்து இயங்க வேண்டும். அதனைவிடுத்து, அரசாங்கத்தை எதிர்ப்பது நல்லதல்ல. அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.."   எனும் தோரணையில் அந்தப் பதிவு இருந்தது. அதற்கு எதிராக சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனம் எழுந்ததும், அவர் தன்னுடைய பதிவினை அழித்துவிட்டார். சட்டத்தரணியான லக்மாலி ஹேமச்சந்திர, கடந்த காலத்தில் செயற்பாட்டாளராக தொடர்ந்து இயங்கியவர். நல்லாட்சிக் காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் புலமையாளர்கள் சந்திப்புக்கள், கூட்டங்கள் தொடங்கி போராட்டங்களிலும் பங்கேற்றவர். முற்போக்கு சிந்தனைத் தளத்தில் தன்னை முன்னிறுத்தியவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவியேற்றதும், ஜே.வி.பி.யின் கடந்த கால மனோநிலையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கத் தொடங்கியதன் விளைவுதான், அவரின் அந்தப் பதிவு.

வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் புலமை முகமாக காட்டப்படும் கபிலன் சுந்தரமூர்த்தி, பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, ஊடகவியலாளர்களை நோக்கி 'காசுக்கு கூவும்' தரப்பினர் என்ற  தொனியை வெளிப்படுத்தினார். தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தமிழ் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடுவதாக அங்கலாய்ந்த கபிலன், ஒரு கட்டத்தில் "...உங்களுக்கு எல்லாமும் காசுதான் வேண்டுமென்றால் சொல்லுங்கள். தருகிறோம். மக்களிடம் வாங்கித் தருகிறோம்..." என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான அவர், சமூகக் கட்டமைப்பில் ஊடகவியலாளர்களின் பங்கினை மிக மலினப்படுத்தி பேசுவது அதிகார அகம்பாவம் இன்றி எதுவென்று கொள்வது. இராணுவம் உள்ளிட்ட அரச படைகளின் அச்சுறுத்தலுக்குள் நாளும் பொழுதும் நின்று தமிழ் மக்களின் வலிகளை உலகம் பூராகவும் எடுத்துச் சென்றவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள். அதற்காகவே, பல உயிர் தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். இன்றைக்கும் பலருக்கு உயிரச்சுறுத்தல் உண்டு. அப்படியானவர்களை நோக்கி, காசுக்கு கூவும் தரப்பினர் என்று கபிலன் என்ன அடிப்படையில் கூற முடியும். அவரின் அறம்சார் மனநிலைக்கு என்ன ஆனது. தேசிய மக்கள் சக்தியினரின் ஏதேச்சதிரகார உரையாடல்கள், ஊடக வெளிப்பாடுகளை ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்துவார்கள். அது அவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பினைச் செய்தமைக்காக, ஊடவியலாளர்களை எதிர்க்கட்சிகளாக - ஊழல்வாதிகளாக சித்தரிப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாதவர் செய்வதுதாகும்.

ராஜபக்ஷக்கள் ஆட்சிக் காலத்தில், ராஜபக்ஷக்களும் அவர்களின் விசுவாசிகளும் அணியும் ஆடைகள், அணிகலங்கள், பாதணிகளின் வர்த்தக குறியீடுகள் (brand), அவற்றின் பெறுமதி தொடர்பில் ஜே.வி.பி.யினர் சமூக ஊடகங்களில் பெரும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். மக்களின் பணத்தினை கொள்ளையடித்து எப்படியெல்லாம் செழிப்பாக வாழ்கிறார்கள் என்று விவாதித்திருக்கிறார்கள்; குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். ஆனால், மே தினக் கூட்டத்தில் அநுர அணிந்திருந்த மேற்சட்டையின் வர்த்தக குறியீடு (Tommy Hilfiger t-shirt ) தொடர்பில் விமர்சனம் எழுந்ததும், தேசிய மக்கள் சக்தியினர் எரிச்சல் அடைகிறார்கள். அரசியலில், குறிப்பாக ஜனநாயக வெளியில் கடந்த காலத்தில் நீங்கள் கையாண்ட ஆயுதங்களை, மற்றவர்கள் உங்களுக்கு எதிராக கையாளும் போது, நீங்கள் எரிச்சலடைகிறீர்கள். இதுதான், ஆட்சியதிகார ஆதிக்க மனநிலையாகும். ராஜபக்ஷக்கள் நாட்டைக் கொள்ளையடித்து குடும்பங்களைச் செழிப்பாக்கியது போல, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள்ளேயே அநுரவும் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டார் என்று இந்த பத்தியாளர் கூற வரவில்லை. ஆனால், அரசியலில் சகிப்புத்தன்மை இல்லாத போது, கடந்த காலத்தில் நீங்கள் புரிந்த போராட்டங்களும், ஜனநாயகக் கூறுகளைக் காப்பதற்காக அர்ப்பணித்தவர்கள் என்று நீங்கள் கூறுவதெல்லாம் அடிபட்டுப் போகும். இலங்கையில், மிக விலையுயர்த்த வர்த்தகக் குறியீடுகள் உள்ள ஆடைகளை வாங்கிக் கொள்ள முடியும். அதுபோல, ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து, பிரபல ஆடை நிறுவனங்களினால் தரக் கட்டுப்பாடு பூர்த்தி செய்யப்படவில்லை என்பதற்காக நிராகரிக்கப்பட்டு, உள்ளூர் சந்தையில் விற்கப்படும் ஆடைகளும் (factory outlet items)  உண்டு. அங்கு, இந்த வர்த்தகக் குறியீடுகளுடன் ஆடைகளை வாங்க முடியும். இலங்கையின் பெரும்பாலான மக்களுக்கு ஆடைகளின் வர்த்தகக் குறியீடு அதன் விலை தொடர்பில் எந்த தெளிவும் இல்லை. அப்படியான கட்டத்தில், அநுரவின் ஆடை தொடர்பிலான விடயத்தை கடந்து போயிருக்க வேண்டும். அத்தோடு, அநுர உலகத் தரத்திலான ஆடைகளை அணியக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அவருக்கு விரும்பியதை அவர் அணிந்து கொள்ளலாம். அதற்காக, பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டால், அதனை விளக்க வேண்டியது அவரது கடமையாகிறது. ஏனெனில், அவர் இப்போது அரச பதவியில் இருக்கிறார். ஊழலுக்கு எதிராக முழங்கிக் கொண்டு, ஆயிரக்கணக்கான கோப்புகளை ஊடகங்களில் கடந்த காலங்களில் காட்டியவர். அதனால், அந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

இந்தப் பத்தியில் தேசிய மக்கள் சக்தியினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்து விடயங்களும், கடந்த சில நாட்களுக்குள் நடந்தவை. இப்படி அவர்களின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், அதிகார அத்துமீறல்கள், வாய்க்கொழுப்புக்கள் பற்றி பேசுவதற்கு பல நூறு விடயங்கள் உண்டு. முதலில், ஜனநாயக வழியில், அதன் தூண்களைச் சிதைக்காது மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து இயங்க வேண்டும். மாறாக, ராஜபக்ஷக்களின் வழியில் தாங்களும் அதிகார துஷ்பிரயோகத்தோடு நடக்கப் போகின்றோம் என்று இயங்கத் தொடங்கினால், மீண்டும் அரகலயக்களும், ஆட்சி மாற்றமும் சாத்தியப்படும். ஏனெனில், கோட்டா பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைத்தான், இரண்டு ஆண்டுகளில் நாட்டு மக்கள் அகற்றினார்கள். அதனை, தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், காலம் யாரையும் மன்னிப்பதில்லை.

-புருஜோத்தமன் தங்கமயில்

(மாலைமுரசு பத்திரிகையில் மே 03, 2025 வெளியான பத்தி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி