சீன எதிர்ப்பு கொள்கைகளை வெளிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி

தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஆட்சி பீடம் ஏறிய தருணம் முதல் சீன ஆதரவு கொள்கையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது என எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது

கொழும்பில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, அநுர குமார திஸாநாயக்க கடந்த காலங்களில் சீனாவிற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய வீடியோவைக் காண்பித்து கருத்து வெளியிட்டார்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் திகதி, அப்போதைய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அநுர குமார திஸாநாயக்க சீனா தொடர்பாக வெளியிட்ட கருத்தை, ஹர்ஷன ராஜகருணா ஒளிபரப்பு செய்து காண்பித்தார்.

சீனா குறித்த அநுரவின் கருத்துகள்

''சீன பிராந்தியமாக மாற்றும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. ஹாங்காங் தொடர்பாக சீனாவின் திட்டமும் இதே தான். சீன ஹாங்காங் திட்டமே, கொழும்பு துறைமுக நகர் திட்டமாக அமைந்துள்ளது" என அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில், சீனாவிற்கு விஜயம் செய்தபோது வெளியிட்ட கருத்தையும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டி வீடியோவை ஒளிபரப்பு செய்தார்.

''சீன அரசாங்கம் இலங்கைக்கு கடந்த பல தசாப்தங்களாக சமூக, பொருளாதார, அபிவிருத்திக்காக பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விஜயமானது எமது இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நெருக்கமாக உறவிற்கு வலு சேர்க்கும் என நான் நம்புகின்றேன்'' என அநுர குமார திஸாநாயக்க, சீன அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இந்த காணொளிகளை ஒளிபரப்பு செய்ததைத் தொடர்ந்து ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களிடம் பேசுகையில் பல கேள்விகளை எழுப்பினார்.

''ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவா இவ்வாறு கதைக்கின்றார்? அவர் ஏற்கனவே கூறிய விடயங்கள் அவருக்கு தற்போது நினைவில் இல்லை. ஒரே நபருக்கு பல அவதாரங்கள் இருக்கும் நிலையும் காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்திலா இவர் இருக்கின்றார்?" எனக் கூறினார்.

மேலும், "இந்த நாட்டை சீன காலனியாக மாற்றுகின்றார்கள் என அநுர கூறினார். அப்படியென்றால்,இந்த பயணத்தின்போது சீன காலனியிலிருந்து விடுபடுவது தொடர்பில் பேசினாரா? இந்த நாட்டு அரசியல்வாதிகளை சீன வாங்கியுள்ளதாக அவர் கூறினார். அவ்வாறு சீனா வாங்கிய அரசியல்வாதிகள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார் ராஜகருணா.

தொடர்ந்து பேசிய அவர், "இலங்கையை சீனா கடன் பொறிக்குள் சிக்க வைத்துள்ளதாக அநுர கூறியிருந்தார். கடன் பொறியில் சிக்க வைத்த சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடி கடனை இல்லாது செய்யும் பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடவில்லை."

"சீனாவிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விஜயம் செய்தமை குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். எனினும், அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சீனாவுடன் கலந்துரையாடல்களை நடத்தினாரா என்பதை வெளிப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

'ஒரே சீன கொள்கையை' தொடர்ந்து கடைபிடிக்கும் இலங்கை

இலங்கை அரசாங்கம் 'ஒரே சீன கொள்கையை' தொடர்ச்சியாக கடைபிடிக்கவுள்ளதாக கடந்த 6-ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

''இலங்கை அரசாங்கம் 'ஒரே சீன கொள்கையை' தொடர்ச்சியாக கடைபிடித்து வந்துள்ளதுடன், அதன்மூலம் சட்டரீதியான சீனாவாக, சீனக் குடியரசை மாத்திரம் மக்கள் ஏற்றுக்கொள்வதுடன் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக்கொள்வதெனும் நிலைப்பாடாகும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன விஜயம், சீனாவுடனான ராஜதந்திர உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெளிவுட்டல் வழங்குவார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தியாவுடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் சமாளித்தபடி அணிசேரா கொள்கை அடிப்படையிலேயே முன்னோக்கி செல்வதற்கு அநுர அரசாங்கம் முற்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சனத் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தாய்வானை சீனா தனது மாகாணமாகவே கருதுகின்றது. எனினும், தாய்வானை தம்மை தனி நாடாக கருதிவருகின்றது. இதற்கு சில மேற்குலக நாடுகள் முழு ஆதரவை தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் தனது அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஏற்கின்றது என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.

"சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜே.வி.பிக்கு(மக்கள் விடுதலை முன்னணி) நெடுநாள் தொடர்பு இருக்கின்றது. முன்பு இருந்தே 'ஒரே சீனா கொள்கையே' ஏற்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய, சீன எல்லைப் பிரச்னை தொடர்பில் கொழும்பு தரப்பில் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் அது டெல்லியுடனான உறவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். எனவே, இந்த ஒரே சீனா கொள்கையென்பது இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது." என்று குறிப்பிடுகிறார் ஆர்.சனத்.

''சீனா மற்றும் இந்தியாவுடனான இராஜதந்திர தொடர்பை மிகவும் நுட்பமாக அரசாங்கம் கையாள வேண்டும், அவ்வாறு இல்லையேல் இராஜதந்திர மட்டத்திலான 'தலையிடிகள்' ஏற்படக்கூடும்'' என்று, மூத்த பத்திரிகையாளர் ஆர். சனத் தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்

அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் சீன ஆதரவு கொள்கையை கொண்டிருப்பதில் எந்தவித ஆச்சரியமும் கிடையாது என சர்வதேச விவகாரங்களின் நிபுணரும், சென்னை லயோலா கல்லூரியின் சமூக பணித்துறை பேராசிரியருமான கிளாட்சன் சேவியர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

''சீனாவை எதிர்க்கக்கூடிய நாடுகள் மிக குறைவாகதான் இருக்கின்றன. ராஜபக்ஸவின் காலக் கட்டத்தில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கி இருந்ததைப் பார்த்தோம். ஹம்பாந்தோட்டை துறைமுகமாக இருந்தாலும் சரி, ரயில்வே தண்டவாளமாக இருந்தாலும் சரி, மிக பெரிய உட்கட்டமைப்பாக இருந்தாலும் சரி எல்லாவற்றிற்கும் சீனாவிற்கு புகலிடம் கொடுத்து வந்தார்கள்." என்று அவர் கூறுகிறார்.

அதேசமயம், இந்தியாவை விட அதிகமான உறவு அப்படியென்று சொல்ல முடியாது என்று குறிப்பிடும் அவர், இந்தியர்கள் உறவுகாரர்கள், சீனர்கள் நண்பர்கள் என இலங்கையில் சொல்வார்கள் என்கிறார்

"சீனாவை பொருத்தவரையும் கேள்விகளைக் கேட்காமல் பணம் கொடுப்பது என்பது வழக்கமானது. இங்கே மட்டும் அல்ல. வேறு நாடுகளிலும் செய்துக்கொண்டிருக்கின்றார்கள். இடதுசாரி கொள்கைகளை கொண்ட ஜே.வி.பி அரசாங்கத்திலுள்ள அநுர குமார திஸாநாயக்க, சீனாவிற்கு நெருக்கமாக இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் கிடையாது." என்கிறார் கிளாட்சன் சேவியர்.

தொடர்ந்து பேசிய கிளாட்சன், "அதேநேரம், முழுமையாக சீனாவை ஆதரிப்பார்கள் என்பதும் தவறான விடயம். சீனாவிற்கான கொள்கையை வகுத்திருக்கலாமே தவிர, சீனாவை முதன்மைப்படுத்துவது என்பது இலங்கைக்கு முரணான விடயமாக கொண்டு சென்று விட்டு விடும்."

"சீனர்கள் எங்கெல்லாம் அதிகமான முதலீடுகளை செய்துள்ளார்களோ, அங்கேல்லாம் அவர்களின் ஆதிக்கம் எப்படி இருக்கின்றது என்பதை காண்கின்றோம். ஆப்பிரிக்க நாடுகளாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி சீனா அதிக்கத்தை செலுத்த நினைக்கின்றது" என்கிறார்.

அதேசமயம், சீனாவை புறக்கணித்து விட முடியாது. ஏனென்றால், அங்கு தான் தேவையான செல்வங்கள் இருக்கின்றன, வளங்கள் இருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"முதல் சுற்று பேச்சுவார்த்தைக்கு இப்போது தான் சென்றிருக்கின்றார்கள். சீனா உதவி செய்கின்றேன் என்று சொல்லியுள்ளது. எந்தளவிற்கு உதவிகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சீனாவை இலங்கை ஆதரித்த போதிலும், சீனா மாத்திரம் கொண்ட எல்லா கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை."

"கடந்த 20 வருட காலமாக இது நடந்துக்கொண்டுள்ளது. புதிய விடயம் அல்ல. ஆனால், சற்று நெருக்கமானவர்களாக காட்சியளிக்கின்றார்களே தவிர பெரியளவிலான வித்தியாசம் இல்லை" என்று கூறுகிறார் பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.

- பிபிசி

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி