சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் இலங்கைக்கு சுமார் 100 மில்லியன் டொலர்

நஷ்டம் ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவதாலும், 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்நாட்டில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இழந்ததாலும் இந்த நஷ்டம் ஏற்படும் என்றார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி இருதரப்பு கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற முடியும் எனவும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இந்நாட்டில் நடத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்குப் பின்னர், இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கத் தான் தயாரில்லை என்றும் தெரிவித்த அவர், அடுத்த  தலைவர், கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்களாலேயே தெரிவு செய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

“இது முழுமையான அரசியல் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சினை என்றே, சர்வதேச கிரிக்கெட் பேரவை நம்புகிறது. சுமார் 45 நிமிடங்கள் வரையில் இந்தப் பிரச்சினை தொடர்பில் அங்கு பேசப்பட்டது.

“இலங்கை விடயத்தில், ஐசிசி கடுமையான தீர்மானமொன்றையே எடுத்தது. எங்களை கிரிக்கெட் விளையாட விடுங்கள். இல்லாவிட்டால், நாடு என்ற ரீதியில் நாம் முழுமையாக விழுந்துவிடுவோம் என்று, அப்போது நான் கூறினேன்.

“சுமார் ஒரு வருட காலமாக நாங்கள் கடிதங்களை அனுப்பினோம். நாம் ஐசிசிக்கு கட்டுப்பட்டிருக்கிறோம். இங்கு விஜயம் செய்த இம்ரான் கவாஜாத்தும் பேசினார். முழுமையான அரசியல் தலையீடு தொடர்பில் நாம் நன்றாக அறிந்த காரணத்தினால்தான் இந்தத் தீர்மானத்தை எடுத்தோம் என்று அவர்கள் கூறினார்கள்.

”எவ்வாறாயினும், இலங்கைக்கு இது மிகப்பெரிய நட்டமாகும். என்னைத் தவிர முழு ஐசிசியும் இலங்கைக்குத் தடை விதிக்கும் முடிவிலேயே இருந்தது.  

“என்னையும் எமது நிறுவனத்தையும் மாத்திரமே நம்புவதாகவும் ஐசிசி அறிவித்தது. பணிவுடன் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால் அது தற்போது போக்கிரித்தனமாக மாறியிருக்கிறது.

“நாங்கள் கள்வர்கள் என்று நிரூபிக்கப்பட்டால், நாம் செல்லவும் தயாராக இருக்கிறோம். கிரிக்கெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், எமக்குத் தடை விதிக்கப்படவில்லை. தொடர்ந்து எம்மால் பணியாற்ற முடியும்.

“நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறாரோ தெரியவில்லை. என்ன பிரச்சினையென்று அவரிடம்தான் கேட்கவேண்டும்.

“19 வயதுக்குட்பட்ட அணி உலகக் கிண்ணத்திலும் ஆசிய அணிப் போட்டியில் தேசிய அணியும் விளையாடும். கிரிக்கெட்டை முழுமையாக விழுங்கத் தயாராக வயது முதிர்ந்த லெஜண்ட் ஒருவர் இருக்கிறார்.

“நடந்து முடிந்த உலகக் கிண்ணத்தை இல்லாமல் செய்ததும் அந்த லெஜண்ட்டும் அமைச்சரும்தான். பெயரை நான் குறிப்பிடவில்லை. அனைவரும் அவர் யாரென்று அறிவர்.

“இப்போது எம்மிடம் 30 மில்லியன் டொலர்கள் உள்ளன. இது, நாம் திருடிய பணமல்ல. அதைத் திருடத்தான் சிலர் இதற்குள் நுழையப் பார்க்கிறார்கள். கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்தன.

“ஐ.சி.சி.க்கு நான் அனுப்பிய கடிதங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தற்போது அவை வெளிவந்துள்ளன. இரகசிய கடிதங்கள். வெளியிட முடியாது.

“ஒன்று மாத்திரம் சொல்கிறேன், இதற்குப் பிறகு நான் இங்கு இருக்க மாட்டேன், அதை நான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதை உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள். அரசியல்வாதிகள் அதை முடிவு செய்ய முடியாது. முன் கதவு வழியாக யார் வேண்டுமானாலும் வரலாம். பின் கதவு வழியாக யாரும் வர முடியாது.

“தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வருடத்திற்கான கொடுப்பனவுகள் வழமை போன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு விளையாட்டு அமைச்சிடமிருந்து தேவையான அனுமதியை பெற்றுள்ளதாக, உரிய ஆவணங்களை முன்வைத்து, இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்த அனுமதி பெறத் தேவையில்லை எனவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி