2024ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சற்று இக்கட்டான நிலையை எட்டினாலும், 2025ஆம் ஆண்டில் நாட்டின்

பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவருவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சாதகமானதாக மாறும் என்ற சர்வதேச கருத்து நிலவுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அண்மையில் ஊடக பிரதானிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதே தனது முதன்மையான நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

இந்த வருட வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் மயமாக்கல் வரவு செலவுத் திட்டம் எனவும் எனவே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (18) இடம்பெற்ற YPO Colombo Experience: Rediscover the Pearl மாநாட்டில் பிரதான உரையை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் புதிய பொருளாதார மாற்றத்திற்கான தனது நோக்கை முன்வைத்த ஜனாதிபதி, பிராந்திய நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய மாதிரியையும் முன்மொழிந்தார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவிற்கும் தமக்கும் இடையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்து தெரிவித்த அதிபர், இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்தும், போட்டித்தன்மைகொண்ட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மேலும் வலுசக்தி மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை, பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தையும், அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, விவசாயத்தை நவீனமயமாக்குவது, காணி உரிமை தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 02 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், பாரியளவிலான நவீன விவசாய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது அதிபர் விளக்கினார்.

செயற்கை நுண்ணறிவுக்கு (AI) பிரவேசித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாரிய பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய தொழில்மயமாக்கல் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, லாவோஸ், கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த நாடுகளிலும் முதலீடு செய்ய இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததுடன், அதற்காக நேபாளத்தையும் ஒன்றிணைக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், வங்காள விரிகுடாவை சூழவுள்ள நாடுகளுக்கிடையில் சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம் குறித்தும், கரீபியன் தீவுகளை விட இது மிகப்பெரிய மாற்றீடாக அமையும் எனவும் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளது என்றும், இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் பரந்த பொருளாதார பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் இளம் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் உள்ள பொருளாதார ஆற்றல்கள் குறித்து நம்பிக்கையுடன் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கப்படும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று இங்கு கூடியிருந்த இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி