கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன்,

அக்குழுவின் கடைசி கூட்டத்தில் பிரசன்னமானது தவறு என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரஞ்சித் பண்டாரவின் மகன் எவ்வாறு கோப் குழுவில் பங்குபற்றினார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பொது நிறுவனங்களுக்கான விசாரணை குழுவின் (கோப்) சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாண்டதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதால் இலங்கையின் கிரிக்கெட் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை முடியும் வரை பேராசிரியர் பண்டார குழுவின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என சில கோப் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் “கோப் தலைவர், கை சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் காணொளிகளில் இது தெளிவாகத் தெரியும்” என்று சஜித் பிரேமதாச குற்றச்சாட்டொன்றை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

எதிர்வரும் நாட்களில் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால விசாரணைகளுக்கு பேராசிரியர் பண்டார தலைமை தாங்க அனுமதிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

"நவம்பர் 24, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கோப் குழு கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பேராசிரியர் பண்டாரவை தற்காலிகமாக நீக்கிவிட்டு, வேறொரு தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பேராசியர் பண்டாரவை தலைமை தாங்கும் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் தானும் கோப் குழுவின் சில உறுப்பினர்களும் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்தவும் கோப் தலைவரை தற்காலிகமாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த பேராசிரியர் பண்டார, விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“கோப் முடிந்தவரை சுதந்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கிரிக்கெட் சபை மீதான விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களால் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

“பல உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசுவதால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி நான் என் உதடுகளில் விரல்களை வைத்து கேட்டுக் கொண்டேன்" என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணைகளில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதோடு, சரியான தீர்வு நிலை குறித்து விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி