‘காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும்

பார்ப்பதில் நியாயமில்லை என்றும், தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி உலக நாடுகள் அனைத்தும் அதற்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தாகவும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேநேரம், பாலஸ்தீன அரச இறைமை தொடர்பிலான நியதிகளுக்கான ஒத்துழைப்பையும் இலங்கை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச சமூகத்தின் இந்த கண்டனமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் கட்டமைப்பிற்குள் பதிலடி கொடுக்கும் உரிமையை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அத்தகைய நியதிகள் உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இல்லாதிருக்கின்றமைக்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஐ.நா.முகவர் நிறுவனங்களுக்கமைய காஸாவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை குறித்து சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கும் பதில்கள் என்னவென்ற கேள்விக்குறியை தோற்றுவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை மற்றும் காஸா பகுதி தொடர்பில் இந்த நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் எதற்காக வேறுபாடு காட்டப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். எவ்வாறாயினும் இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சர்வதேச சட்டத்தின்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக எடுக்கப்படும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திட்டங்களுக்கு அமைவானதாக காணப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதேபோல் காஸா எல்லையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் மீதான பாதிப்பு தொடர்பில் கவலை தெரிவித்த ஜனாதிபதி, உணவு பாதுகாப்பின்மை, எரிபொருள் இன்மை, அத்தியாவசிய மருந்து பொருட்கள் இன்மை, உள்ளக வருமானம் குறைவடைதல் என்பன இலங்கை கடந்த வருடத்தில் முகம்கொடுத்த நெருக்கடியை விடவும் பாரதூரமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேற்குலக நாடுகள் இலங்கை மற்றும் காஸா எல்லை தொடர்பில் பின்பற்றும் நியதிகளின் வேறுபாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

வெலிமடை மக்களின் நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், அலுவலக வசதிகள் உட்பட பொது வசதிகளை உள்ளடக்கியதாக மேற்படி 03 மாடிக் கட்டிடத்தொகுதி 460 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்துள்ளமையினால் குறைந்தபட்ச வசதிகளை கொண்டிருந்த வெலிமடை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைளுடன் கூடியதாக மாறியுள்ளது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து நீதிமன்ற கட்டித்தொகுதியை திறந்துவைத்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வெலிமட சட்டத்தரணிகள் சங்கத்தினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ,

“கடந்த காலங்களில் கடினமான நிலைமைகளுக்கு மத்தியில் வெலிமடை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு அபாயத்திற்கு மத்தியிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த 2015 -2019 காலப்பகுதியில் இதுபோன்ற 85 நீதிமன்றக் கட்டிடத்தொகுதிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அவற்றில் 45 கட்டிடங்களை திறந்து வைக்க முடிந்தது. அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 02 கட்டிடங்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன. இறுதியாக இரத்தினபுரியிலும், இன்று வெலிமடையிலும் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த மாதமளவில் தெல்தெனிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நிலைமையினால் நாட்டின் நிறைவேற்றுத் துறையும், அரசியலமைப்பினதும் இருப்பு கேள்விக்குரியானதுடன், அந்த நிலை சட்டத்துறைக்கும் ஏற்பட்டிருந்தால் நிலைமை பாரதூரமாகியிருக்கும். ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் பரவல் என்பன அரசாங்கத்தின் இருப்புக்கு சவால் விடுத்தமையாக மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.

சுதந்திரத்தின் பின்னரான 75 வருடங்களாக மக்கள் தெரிவு செய்த குழுவினரே நாட்டை ஆள்கின்றனர். சட்டத்துக்கு அமைவான தேர்தல்கள் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட குழுவினரால் நாட்டின் ஆட்சி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும், அந்த 75 வருட ஆட்சியையும் கடந்த 15 மாதங்களுக்குள் நாட்டில் நடக்கும் ஆட்சியையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான அரசியல் தலைமைத்துவத்தினால் நாடு இன்று சுமூகமான நிலைமைக்கு திரும்பியுள்ளது. அவர் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது 76% காணப்பட்ட உணவுத் தட்டுப்பாடு தற்போது 0% ஆக காணப்படுகின்றதுஎ” என்றும் தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா

“வௌ்ளையர்கள் ஆட்சியில் ஊவா மாகாணத்திற்கு அநியாயம் இழைக்கப்பட்டது. அதனால் ஊவா மாகாணம் ஏனைய மாகாணங்களை விட பின்தங்கியே காணப்பட்டது. ஏனைய ஆட்சியாளர்கள் அவர்களுக்குரிய பகுதிகளை துரிதமாக மேம்படுத்திய போதும் ஊவா மாகாணத்தில் அதனைச் செய்யவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஊவா மாகாண பல்கலைக்கழகத்திற்கு வைத்திய பீடமொன்றை பெற்றுக்கொடுப்பதாக தீர்மானித்துள்ளார். கண்டி – பதுளை ராஜ மாவத்தையை அபிவிருத்தி செய்வதற்கான வரவு செலவு திட்டத்தில் 685 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இன்று திறக்கப்படும் நீதிமன்ற கட்டிடத்திற்கு 460 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பதால் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் அபிவிருத்தியை நோக்கிச் செல்கிறது.

ஊவா மாகாணத்தின் மீதான வெளிநாட்டு முதலீடுகளின் ஈர்ப்பு அதிகமாக காணப்படுகிறது. புதிய நீதிமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை அந்த முதலீட்டு வாய்ப்புக்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையும். இதனை திறந்து வைப்பதால் மாத்திரம் மக்களுக்கு நன்மை கிடைக்காது. அதற்காக நீதிமன்றத்திலிருப்பும் பிரிவுகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, தேனுக விதானகமகே, சாமர சம்பத் தசநாயக்க, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தேனிபிட்டிய, ஊவா மாகாண ஆளுநர் ஜே.எம்.எல்.முஸம்மில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மாவட்ட நீதிமன்ற நீதிவான்கள், நீதிவான் நீதிமன்ற, நீதிவான்கள், வெலிமட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கலானி பீ. பத்திரன உள்ளிட்ட சட்டத்தரணிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி