மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”

என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்​கையில்,

இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது.

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது முகநூல், எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும். அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார். இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன்.

தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார்.

பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்? என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி