ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின்

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,

“எமது நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது படிப்படியாக எழுச்சி பெற்று வருகின்றது. இது இன்னும் முழுமையாக முற்றுப்பெறாத நிலையிலேயே இருக்கின்றது. மக்களின் வாழ்க்கைச் சுமை முற்றுமுழுதாக குறைந்துவிட்டது என்று கூற முடியாது. எவ்வாறு இருந்தாலும் கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தற்பொழுது ஓரளவு குறைந்து கொண்டு வருகின்றன.

தொடர்ந்தும் இவ்வாறு மக்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் உட்பட அரசாங்கம் மேற்கொள்கின்றது. இது தொடர்ச்சியாக சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். ஏனென்றால், நான் ஒரு வர்த்தக இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். ஏனென்றால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இந்நாட்டில் வாழும் சாதாரண மக்களையே அதிகளவில் பாதிக்கின்றது.

எனவே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய இன்னும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அது மிக முக்கியமான விடயமாகும். அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

அதேநேரம், சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட இன்னும் ஒரு சில வர்த்தகர்கள் அதன் விலைகளை குறைத்ததாகத் தெரியவில்லை. எப்போது அவற்றை அதிகரித்தார்களோ, அதே விலையிலேயே தற்போதும் அப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அதனால், இவ்வாறு விலை குறைக்கப்பட்ட பொருட்களை யார் அதிக விலையில் விற்கின்றார்களோ அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளுக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம்.

ஆகவே இந்நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளைக் காண்பதன் மூலம் அத்தியவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே இப்போது மிக முக்கியமான விடயமாக உள்ளது. இதற்கான பணிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், தற்போது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜனாதிபதி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு நடத்தி வருகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது சீர்திருத்தம் மற்றும் அது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இதுபோன்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நாமும் இவ்விடயம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளோம். அவையும் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு அமைய நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளோம்.

நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் நாம் எதிர்நோக்கிய ஒரு பாரிய சவாலாக அமைந்தது கொவிட் தொற்றாகும். கொவிட் தொற்றிலிருந்து ஓரளவு நாங்கள் மீண்டு வருகின்றபோது, இரண்டாவதாக நாம் எதிர்நோக்கிய மிகப் பெரிய சவால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாகும். இதில் கிட்டத்தட்ட பதினாறு , பதினேழு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இதிலிருந்து மீள்வதற்கு எமக்குக் கிடைத்த குறுகிய காலத்தில் இயன்றளவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தற்போதும் முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக வீதி அபிவிருத்தி, பாலங்களை அமைத்தல், விவசாயத்துறை சார்ந்த விடயங்கள், மீன்பிடித் துறை சார்ந்த விடயங்கள், அதேபோன்று மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் போன்ற பல்துறை சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இயன்றளவு நாம் செயற்படுத்தி வருகின்றோம். ஆனால் அவை முழுமையானவை என்று கூற முடியாது. இருந்தாலும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் நாங்கள் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று முதன் முதலாக கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் தற்போதைய ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். அதில் அவர் கூடுதல் ஆர்வத்தையும் காட்டுகின்றார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடியவர். எனவே நாம் அவருடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எமது தமிழ்த் தலைவர்கள் முன்வரவேண்டும். அதேபோன்று தென்னிலங்கையில் இருக்கின்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் தமிழ்த் தலைவர்கள் கலந்துரையாட வேண்டும். எங்களுடைய பிரச்சினைகளையும் எங்களுடைய நீதியான, நியாயமான மற்றும் தரப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் அவர்களுடன் கதைக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் எமக்காக குரல் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் அந்த இடத்திற்கு எமது விடயங்கள் போய்ச்சேரவில்லை.

நாம் ஒட்டு மொத்தமாக அனைவரையும் தவறாக நினைக்க முடியாது. இந்த விடயத்தில் நாம் சரியான முறையில் நமது நகர்த்தல்களை மேற்கொள்ளவில்லை என்றே நினைக்கின்றேன். அந்த நகர்த்தல்களை அதிவேகமாக நாம் முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.” என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி