ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக

முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கிராமிய வீதி அபிவிருத்திக்கான கோரிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது.

எனினும், கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதேபோல் வரும் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் வெளிநாட்டு நிதிகள் மூலம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிகமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் இருக்கிறது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றார். பாராளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு, மக்கள் பிரதிநிதிகளிடம் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். அண்மையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி மாநாடு ஒன்றையும் நடத்தினார். ராஜீவ் – ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிகை இருக்கின்றது.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடும் அதே நேரம், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், எமக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மாத்திரமே வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை இரண்டுமே இரு தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 13ஆவது அரசியலமைப்பை அமுல்படுத்துவதில் மிதமான போக்குடன் இருதரப்பும் சுமூகமான கலந்துரையாடல்களை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே இந்நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தது என்றும் தெரிவித்தார். 13ஆவது அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார். ஆனால் இதில் பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் இவை பெரும்பாலும் அரசியல் நோக்கங்களில் கூறப்படலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நம்பிக்கை வைத்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

13 ஆவது திருத்தத்தை செயற்படுத்தத் தேவையானப் பரிந்துரைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதன்படி, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி என்ற வகையில் தமது கருத்துகளை முன்வைக்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராமிய வீதி அபிவிருத்தி என்பது கல்வி, பொருளாதாரம் போன்ற பல்வேறு விடயங்களின் முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணியாக அமைகின்றது. ஆனாலும் நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் இவ்வாறான அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது சிரமமாக இருந்தாலும், தற்போது அமைச்சில் உள்ள நிதியைக் கொண்டு முடியுமானவரை வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று அமைச்சு திட்டமிட்டுள்ள எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பாக கப்பற்றுறை, உற்பத்தித் துறை, சுற்றுலா வலய மேம்பாடு, ஏற்றுமதி பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு, மீன்படி மற்றும் உள்நாட்டில் பயிரிடக் கூடிய தானியங்களைப் பயிரிடல் போன்ற பல்வேறு பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் முந்திரி பயிர்ச்செய்கையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான அரச காணிகளை இதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும், இத்திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி