போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலி ஒன்றை

உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

24 ஆம் திகதி மதுவரித் திணைக்களத்துக்குக் களப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ. த சில்வா மற்றும் காமினி வலேபொட ஆகியோர் இணைந்து கொண்டனர்.

போலியான தயாரிப்புக்களைத் தடுப்பதற்காக மதுபானப் போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதும், சந்தையில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பயன்பாட்டில் இருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். போலியான ஸ்டிக்கர்களை அடையாளம் காண்பதற்கான முறைமையொன்று திணைக்களத்திடம் இல்லை என்றும் இதன்போது இனங்காணப்பட்டது.

அத்துடன், கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் மதுபானம் ஊடாகக் கிடைக்கப்பெற்ற வருமானம் வீழ்ச்சி கண்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், மதுபானங்களுக்கான விலையை அதிகரிக்கும் முன்னர் கேள்விக்கான நெகிழ்ச்சி கணிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அதுமாத்திரமன்றி மதுபானம் மீதான வரி அதிகரிப்புக்களை மேற்கொள்ளும்போது உரிய கணக்கெடுப்புக்களை ஆதாரமாகக் கொண்டு நிதி அமைச்சுக்கு உரிய ஆலோசனைகளை திணைக்களத்தினால் வழங்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. அத்துடன், மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தும் அரிசி உள்ளிட்ட மூலப்பொருட்கள் தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் குழு, மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியது.

அத்துடன், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தின் அளவு, சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள மதுபானத்தின் அளவு உள்ளிட்ட தகவல்களை நேரடியாகப் பார்வையிடக் கூடிய கட்டமைப்பொன்று மதுவரி ஆணையாளர் நாயகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

மதுபான உற்பத்திக்குத் தேவையான கள் மற்றும் செயற்கைக் கள் உற்பத்தியினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் கள் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான புதிய தென்னை மரங்களின் பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பல உரிய வரிகளைச் செலுத்தாமல் நிலுவையைக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அவ்வாறான நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்துமாறு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி