குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன

குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

அண்மைகாலமாக ஆதிசிவன் திருக்கோவில்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு சைவத்தமிழ் தொன்மங்கள் பௌத்த சிங்கள தொன்மங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருவது வடக்கு கிழக்கில் தொடர் கதையாக உள்ளது.

இந்த வகையில் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் திருக்கோவில் வழிபாட்டுரிமை மறுக்கப்ட்டு சிவ வழிபாட்டு தொன்மங்கள் அகற்றப்பட்டு பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளையை புறந்தள்ளி அமைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. 

கடந்த வாரங்களில் ஆதி சிவன் கோவில் வளாகத்தில் சைவ வழிபாட்டிற்கு நீதிமன்ற கட்டளையும் மீறி தடை ஏற்படுத்தப்பட்டுள்ள அதே நேரம் இந்த வாரம் சட்டவிரோத கட்டுமான இடத்தில் புத்தருடைய சொரூபம் வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

இது இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதிபத்தை மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் எம் சைவ ஆதீனங்களின் அருள் வழிகாட்டிலில் இயங்கும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் உண்மையான சைவ சமய அமைப்புக்கள் மேற்படி மோசமான சைவத்தமிழர்களின் தொன்மங்களை மாற்றியமைக்கும் வழிபாட்டுரிமையை மறுதலிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளனர். 

இந்த நிலையில் அரச கட்டமைப்புக்ள் நீதிமன்ற கட்டளைகளை பின்பற்றுவதை மதிப்பதை நாட்டின் அரச தலைவரான சனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும். அதே போன்று தொல்லியல் திணைக்கள விவகாரங்களில்  சனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

அதே நேரம் நாட்டின் நீடித்த நிலையான சமாதானத்திலும் அபிவிருத்தியிலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதிலும் பெரும் பங்காற்றும் இந்திய பேரரசு இந்த விவகாரங்களில் தமிழ் மக்களிற்கு குறிப்பாக எமது ஆதிசிவ வழிபாட்டு மரபுரிமைகளை வழிபாட்டுரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

 முற்றிலும் ஆக்கிரமிப்பு மனநிலையில் பல ஆயிரம் வருடங்களாக சைவத்தமிழ் மக்கள் வசிக்கும் வழிபாடுகளை மேற்கொள்ளும் கடந்த நூற்றாண்டுகளில் சுயாதீன அகழ்வாராய்ச்சி நிபுணர்களால் ஆவுடையார், நந்தி அகழ்ந்து எடுத்து உறுதிப்படுத்தப்பட்ட பண்டைய தமிழ் இராசதானியும் பிரமாண்ட சிவாலயமும் அமைந்திருந்த வன்னி சிவப்பிராந்தியத்தின் முல்லைத்தீவையும் திருகோணமலையும் இணைக்கும் குருந்தூர்மலையில் ஏற்படுத்தப்பட்டு வரும் அமைதியின்மை மத நல்லிணக்கத்தை ஆழமாக பாதித்து இன விரிசலை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை துணைபோகும் அனைவரும் மனங் கொள்ள வேண்டும்

வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் இந்த விவகாரத்தில் காத்திரமாக தொடர்ச்சியான பயனுறுதி வாய்ந்ததாக அமைய வேண்டும்.

அனைத்து தரப்பினரும் இணைந்து சுமூகமாக ஆக்கிரமிப்பு மனநிலையை கைவிட்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலப்பரப்பில் வழிபாட்டுரிமைகளை மதித்து, தொன்மங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதன் மூலம் உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

சிவப்பரம்பொருளின் பூரண அருள் நல்லெண்ணங்களை வளர்க்க அனைவருக்கும் கிடைப்பதாகுக - என்றுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி