ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன்

தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் ஆரம்ப கட்டப் பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பதிரண இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண,

கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகள் போன்று பெருந்தோட்டக் கைத்தொழிலும் எதிர்கொண்ட பாரிய பிரச்சினை உரப் பற்றாக்குறையாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்தவுடன் இப்பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கி இதனைத் தீர்ப்பதற்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து,

முக்கியமாக இந்நாட்டு தேயிலை உற்பத்திக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்திய உரப் பிரச்சினை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. உரம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் அதிகரித்திருந்த உர விலை தற்போது குறைந்து வருகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தேயிலை உற்பத்தியை பொருத்தவரை, கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்ந வருடம் அதன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அதே நேரம் எமது தேயிலைக்கு உள்ள சர்வதேச சந்தை வாய்ப்புகள், குறிப்பாக உக்ரைன் – ரஷ்யப் போர் மற்றும் எமது நாட்டுத் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்யும் நாடுகளான ஈரான், ஈராக், லிபியா, மற்றும் சிரியா போன்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டு யுத்தம் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வாக நாம் மசகு எண்ணை இறக்குமதிக்காக ஈரானுக்கு வழங்க வேண்டிய சுமார் 500 மில்லியன் டொலர்களுக்குப் பதிலாக தேயிலையை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய இணக்கப்பாடொன்றுக்கு நாம் கடந்த வருடம் வந்தோம். அதன்படி எதிர்காலத்தில் எண்ணைக்குப் பதிலாக தேயிலை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் அந்நாட்டுக்கு நாம் செலுத்த வேண்டியுள்ள நிதிக்கு ஈடான பெறுமதியுள்ள தேயிலையை படிப்படியாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் மூலம் தடைப்பட்டிருந்த ஈரான் நாட்டின் சந்தை வாய்ப்பை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் இறப்பர் உற்பத்திப் பொருட்களுக்கு கேள்வி அதிகரித்ததையடுத்து எமது நாட்டு இறப்பர் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக திடமான டயர் உற்பத்தியில் உலகளவில் இலங்கை முன்னிலை வகிக்கும் மையமாக கருதப்படுவதால் எமது நாட்டு இறப்பருக்கு பாரிய கேள்வி உள்ளதாகவும் அதன் காரணமாக இறப்பர் ஏற்றுமதி வருமானம் உயர்வடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார நெருக்கடியுடன், அனைத்து வகையான பொருட்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

இவ்வருடம் மூன்றாம் காலாண்டுக்குப் பிறகு இந்நிலை மாறி மீண்டும் இயல்பு நிலைக்கு சந்தை வாய்ப்புகள் திரும்பும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி இலக்குகளை அடைய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேயிலை மற்றும் இறப்பர் தவிர, அண்மைக் காலங்களில் தென்னை சார்ந்த பொருட்களின் வருமானம் அதிகரித்துள்ளதை நாம் கண்டுகொள்ளலாம். 2020 உடன் ஒப்பிடும்போது, 2021 மற்றும் 2022 இல் சந்தை வாய்ப்புகள் சுமார் 15%-20% வரை அதிகரித்துள்ளது.குறிப்பாக தேங்காய் சிறட்டையினால் உற்பத்தி செய்யப்படும் ஆக்டிவேட்டட் கார்பன், தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் மற்றும் தேங்காய் பால் மா ஆகியவற்றுக்கு சர்வதேச சந்தையில் பாரிய கேள்வி நிலவுவதால் 2022 இல் 836 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் சுமார் 1.5-2.00 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அண்மைய காலங்களில் பாரிய அளவில் தென்னந் தோப்புகள் துண்டாடப்பட்டதன் ஊடாக தென்னை மரங்கள் அழியத் தொடங்கியுள்ளதைக் கண்டுகொள்ளலாம். இதனைத் தடுக்கவும் நாட்டில் தென்னை சார் கைத்தொழிலை மேம்படுத்தும் வகையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, கொள்கை ரீதியிலான பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, 10 ஏக்கருக்கு மேல் உள்ள தென்னந் தோப்புகளைத் துண்டாட மட்டுமே அனுமதி பெற வேண்டும். ஆனால் இதற்கு மாற்றமாக எதிர்வரும் காலங்களில், ஒரு ஏக்கருக்கும் அதிகமான தென்னந் தோப்புகளைத் துண்டாட அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய மரம் என்ற பட்டியலில் தென்னை மரத்தையும் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இரண்டு தென்னை மரங்களுக்கு மேல் வெட்டுவதற்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப் படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஏற்றுமதிப் பயிர்கள் மூலம் முக்கியமாக கறுவா மற்றும் ஏனைய பயிர்கள் ஊடாக அதிக வருமானம் கிடைத்துள்ளதாகவும், அது கடந்த வருடம் சிறியளவில் வீழ்ச்சியடைந்தாலும் இந்த ஆண்டு சுமார் 400 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயம் தொடர்பான அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இலங்கையில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான புதிய முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பெருந்தோட்டக் கைத்தொழிலை பாதித்த அனைத்து தடைகளையும் தாண்டி, எதிர்காலத்தில் வலுவாக முன்னோக்கிச் செல்ல முடியும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்காக பெருந்தோட்டத்துறையின் பெறுமதியை அதிகரிக்கச் செய்யும் உற்பத்திச் செயற்பாட்டுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் நிதி ஒதுக்கீடுகள் போன்ற விடயங்களில் தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதோடு, பெருந்தோட்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவசியமான அனைத்து பணிகளையும் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி