அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின்

சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே இருந்ததையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டை மீட்டெடுக்க முடியாது என பலரும் நினைத்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் கடந்த 7 மாதங்களில் அந்த நிலையை மாற்றி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனது அணியினரால் முடிந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இல்லை என்றும் வலியுறுத்தினார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அனைவரும் காண முடியும் எனவும், பிராந்தியத்தில் மிகவும் வளமான நாடாக இலங்கையை மாற்ற, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினால் மட்டும் போதாது எனவும், அதற்கு பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கான 25 வருட திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் மட்டுமே அதனை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

அலரி மாளிகையில் இன்று (19) நடைபெற்ற 32ஆவது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு புனித தோமஸ் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, விசாகா கல்லூரி, கண்டி உயர் பெண்கள் பாடசாலை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை 32வது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டின் தலைவர் அப்துல்லா சித்தீக் வரவேற்றார்.

இன்டரெக்ட் உலகளாவிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும் ஒத்துழைப்பையும் பங்கேற்பையும் பாராட்டி, சர்வதேச ரொட்டரி கழக மாவட்டத் தலைவர் (இலங்கை மற்றும் மாலைதீவு) புபுது டி சொய்சா , ஜனாதிபதிக்கு ஒரு சின்னத்தை அணிவித்ததோடு, இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டின் தலைவர் அப்துல்லா சித்தீக் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,

“நேற்று நடைபெற்ற றோயல் – புனித தோமஸ் கிரிக்கட் போட்டியினால் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போகும் என்று உங்கள் மாவட்ட பொறுப்பாளர் கவலையடைந்ததாக அறிந்தேன். ஆனால் கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்து, இன்று ஒரு புதிய நாள் தொடங்கியுள்ளது. மேலும் இது ஒரு சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டி என்றே கூற வேண்டும். றோயல் மற்றும் புனித தோமஸ் அணிகளை நான் பாராட்டுகிறேன். இந்தப் போட்டி இரு தரப்புக்கும் அடுத்த ஆண்டு விளையாடும் மாணவர்களுக்கும் புதுப் பரீட்சை என்றே சொல்ல வேண்டும். போட்டிக்கு எப்படித் தயாராக வேண்டும்? உங்கள் பயிற்சியாளருடன் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? போட்டியில் வெற்றி பெற எப்படி முயற்சிக்க வேண்டும்? தோல்வியை எவ்வாறு தவிர்ப்பது என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், றோயல் – புனித தோமஸ் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய நாள் தீர்க்கமானதாக இருந்தது. தோமஸ் அணியினர் ஏன் தோல்வியடைந்தார்கள்? றோயல் கல்லூரி எப்படி வென்றது என்பதை ஆராய வேண்டும். இவற்றில் உள்ள பலவீனங்கள் என்ன? ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.

றோயல் கல்லூரியின் தரப்பில், குறிப்பாக அதன் தலைவர் மற்றொரு சவாலை எதிர்கொள்கிறார். பல போட்டிகளில் தோல்வியடைந்த பின்னணியில் எப்படி தோல்வியடையாமல் இருப்பது என்பதும், இரண்டாவதாக வெற்றி பெறுவது எப்படி என்பதும் சவாலானது. தோல்வியைத் தவிர்த்து, வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். உண்மையில் இது ஒரு நல்ல தலைமைத்துவம். அவர் பாராட்டுக்குரியவர். றோயல் கல்லூரி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து வரும் இவ்வேளையில், இறுதியாக வெற்றி பெற்றுள்ளது. றோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவர் செய்ததை இப்போது செய்ய முயற்சிக்கிறேன். கடந்த ஜூலை மாதம் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். அப்போது எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு இருந்தது.

எங்களிடம் பணம் இருக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்குப் பணம் செலுத்துவது கடினமான பணியாக இருந்தது. றோயல் அணி பல போட்டிகளில் தோல்வியடைந்தது. அதிலிருந்து மீள முடியாது என்று பலர் நினைத்தார்கள். கடந்த 7 மாதங்களில் இருந்து இப்போது வரை எமது அணியால் நிலைமையை சீராக்க முடிந்தது.

இப்போது எரிபொருள், உணவு, உரம் உள்ளன. ஏப்ரல் மாதத்திற்குள் தேவையான அளவு அரிசி கிடைக்கும். வங்குரோத்து என்ற நிலையில் இருந்து நாடு மீண்டுவிடும். ஆனால், கடன் நிவாரணம் மூலம்தான் நாட்டை மீட்டெடுக்க முடியும். அடுத்த சில நாட்களில் அது நடக்கும் என்று நம்புகிறேன். நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதில் நானும் உழைக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் குழு நமக்கு மூச்சு விடுவதற்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்த வாய்ப்பில் வெற்றிபெறுவதற்கு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது மட்டும் போதாது. அதற்கு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்தாவிட்டால் மீண்டும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்.

நான் ரோயல் கல்லூரியில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது, ஆசியாவிலேயே இரண்டாவது வளமான தேசமாக நாங்கள் இருந்தோம். முதலில் ஜப்பான், அடுத்தது இலங்கை. இன்று மற்ற எல்லா நாடுகளும் நம்மை மிஞ்சிவிட்டன.

இப்போது எனது நோக்கம் கடனை மறுசீரமைப்பது மட்டுமல்ல, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அடித்தளம் அமைப்பதும் அல்ல, அதன் மூலம் நமது கடனை பத்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த முடியும். அடுத்த 40-50 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் வளமான புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது நோக்கம். நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்கிறது. எனினும் ஏனைய வளமான நாடுகளைப் போன்று மேலதிக உபரியை நாட்டில் உருவாக்குவதே இறுதி இலக்காகும்.

அந்த பெரிய ஆட்டத்திற்கு எனக்கு ஒரு அணி தேவை. என்னுடைய அணி வேறு யாருமில்லை. நீங்கள் அனைவரும் தான். அதற்கான 25 வருட திட்டம் எங்களிடம் உள்ளது. 2048ல் இந்த நாடு வளமான நாடாக மாறும்.” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச ரோட்டரி கழக மாவட்டத் தலைவர் (இலங்கை மற்றும் மாலைதீவு) புபுது டி சொய்சா, மாவட்ட இண்டராக்ட் குழுத் தலைவர் ஷனாஸ் ஷஹாப்தீன், இளைஞர் குழுத் தலைவர் ஜி.எஸ்.சில்வஸ்டர், கிருஷாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி