வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம்

உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் தவறானவர்களைத் தெரிவுசெய்து மக்கள் தாம் செய்த தவறினை நிவர்த்தி செய்வதற்கான முதலாவது சந்தர்ப்பமாக இந்த தேர்தல் இருக்கின்றது.

ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திற்கும் இந்த பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு இந்த தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக எமக்கு அமைந்திருக்கின்றது.

எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தினை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையில் ஈடுபடுமாக இருந்தால் அது மக்களது ஜனநாயக சுதந்திரத்தில் கைவைக்கும் நிலைப்பாடு ஆகும்.

ஆனால் அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் பின்னிற்க மாட்டோம்.

எனவே நாம் எமது தேர்தல் வெற்றிகளை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு அனைவரும் தமிழரசுக்கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது வேட்பாளர்களை நாம் தேடித் தேடி தெரிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் எமது வேட்பாளர் பட்டியலில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கல்வி மான்களே உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

எமது கட்சியில் எந்தவொரு ஊழல் மோசடி, கொலைக் குற்றச்சாட்டு மற்றும் மண் மாபியாவில் ஈடுபட்டவர்கள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப்போல் கொலைகாரர்களை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் தலைநகரம் கொழும்பிலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் இந்த நாட்டிலே எவருக்குமே சுதந்திரமில்லை.

ஆனால் இம்முறை சுதந்திரதினத்தை இந்த நெருக்கடியான சூழலிலும் கொண்டாடித் தீர வேண்டுமென ஜனாதிபதி நிற்கின்றார். ஏனெனில் மக்கள் சுதந்திர தினத்தினை மறந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் வாழும் எவருமே இன்று பொருளாதாரச் சுதந்திரம் உள்ளிட்ட எந்தவிதமான சுதந்திரத்தினையும் அனுபவிக்கவில்லை.

அது தமிழர்களுக்கும் இல்லை. முஷ்லிம்களுக்குமில்லை. ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி உள்ளிட்ட தவறுகளால் நாட்டு மக்களுக்கு தற்போது பொருளாதார சுதந்திரம்கூட மறுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமலிருக்கின்றனர்.

எனவே நாம் கிழக்கில் கறுப்புச் சுதந்திர தினத்தினை அனுஷ்டிப்பதற்குத் தயாராகி வருகின்றோம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு அரசியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்துள்ளதைக் காண்கின்றோம். எனவே இந்தமுறை சுதந்திர தினத்தில் நாம் எமது பாரிய எதிர்ப்பினை கிழக்கில் வெளிப்படுத்துவதற்குத் தயாராகி வருகின்றோம்.

எனவே சர்வதேசத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறும் முக்கிய தினமாக பெப்ரவரி நான்காம் திகதி நாம் முன்னெடுக்கவிருக்கின்ற இந்த கறுப்புச் சுதந்திர தின எதிர்ப்பு நாள் அமைய வேண்டும்.

தமிழர்களின் விடயங்களைக் கையாளும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுக்கு நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மூலம் இன்னமும் எமக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்து எரிமைகளும், சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட வருகின்றன என்பதனை பலமாக நாம் எடுத்துக்கூற வேண்டும்.

நாம் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெறுவதற்காகவே என்பதை சர்வதேசத்திற்கும் சிங்கள பெரும்பான்மையினத்திற்கும் எடுத்துக்கூறவேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழரசுக் கட்சியினை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் மக்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி