தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்தின் தலைமையுடன் தமிழர்த் தரப்பு நேற்று முதல்

நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து நடத்த உத்தேசித்திருந்த பேச்சுவார்த்தைகள், நேற்றுடன் (10) இடைநிறுத்தப்பட்டன.

உடனடி விடயங்களை அரசாங்கத் தரப்பு நிறைவு செய்வதற்கு ஒருவார கால அவகாசம் அளித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேச்சுவார்த்தையை முடக்கியுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் மீண்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன. இதன்போது, அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் பங்குபற்றினர்.

தமிழர் தரப்பிலிருந்து, கூட்டமைப்பு பிரமுகர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருக்கவில்லை.

நேற்றைய சந்திப்பின் பெறுபேறுகள் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,

“உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகக் கடைசி இரண்டு கூட்டங்களில் சொன்ன விடயங்களைத்தான் திரும்பவும் அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர். ஐந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தயாராக உள்ளதாக பழைய கதையையே பேசினார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் ஒரு பொறிமுறையைச் சட்டத்தின் மூலம் உருவாக்கப் போகிறோம் என்றார்கள். சட்டமூலம் எங்கே என்று கேட்டால், அது இன்னும் தயாராகவில்லை, விலைவில் தயாராகும் என்றார்கள்.

“நில விடுவிப்பு குறித்துக் கேட்டால், ஜனாதிபதி தாம் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் என்றும் அங்கு பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறுகிறார்.

“ஆகவே, நடைமுறைக்கு ஒன்றும் வரவில்லை. இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கள் விடயங்களை அப்படியே நடைமுறைப்படுத்துவது குறித்து ஒரு குறிப்பு ஏற்கெனவே கொடுத்திருந்தேன்.

“அதில் முதலாவது, தேசிய காணி ஆணைக்குழுவை உடன் நியமித்து, காணிக் கொள்கையை ஏற்படுத்தலாம் என்று கூறியிருந்தேன். அதற்கு சரி என்று சம்மதித்தார். அதைச் செய்யலாம் என்றார்.உடனே செய்யலாம், அந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி தான் நியமிக்க வேண்டும், அதை உடன் செய்யுங்கள் என்றேன். அதற்கும் சம்மதித்தார்.

“அடுத்து, மாகாணப் பொலிஸ் படையை உருவாக்க வேண்டும் என்றேன். பல காரணங்களைக் கூறி பின்னடித்தார்கள். வேறு வேறு பிரச்சினைகளைக் கூறினார்கள். இவை இருக்கலாம். ஆனால் நீங்கள் இதை அமுல்படுத்துவோம் என்று எல்லோருக்கும் இதுவரை கூறி வருகின்றீர்கள். இதைச் செய்ய முடியாது என்றால், அதைத்தானே நீங்கள் வெளியே சொல்ல வேண்டும் என்று கேட்டேன். அன்று சர்வகட்சி மாநாட்டிலும் சட்டத்தில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவோம் என்றுதானே கூறினீர்கள். இதற்கு வேறு ஒரு சட்டமும் நிறைவேற்றத் தேவையில்லை. ஜனாதிபதியே இதை உடனடியாக நடைமுறைப்படுத்தலாம் என்றேன். ஆனால், அதற்கு சரைியான பதில் இல்லை.

“சாதாரணச் சட்டங்களில் திருத்த வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதிகாரப் பகிர்வைத் தடுப்பதற்குச் செய்யப்பட்ட அந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் அரசாங்கத் தரப்பின் பதில் திருப்தியாக இல்லை.

“மாகாணங்களின் அதிகாரங்களைச் சட்டங்கள் மூலம் பறித்தெடுத்துள்ளீர்கள். அவற்றைத் திருத்துவது தொடர்பான விடயத்திலும் அரசாங்கத் தரப்பிடமிருந்து உருப்படியான பதில் வரவில்லை.

“பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் மாகாணங்களிம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. அவை மீள மாகாணங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றேன். மாகாண முதலமைச்சராக இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆதோதித்து வரவேற்றார்” என, சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி