அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் வாழும் மக்கள் அடிப்படை வைத்திய

வசதிகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரியானது, வைத்தியர்களுக்கும் பல்வேறு தொழில்துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக யாழ். தீவகப் பகுதி வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத் தீவுகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு பணிக்குச் செல்லும் வைத்தியர்கள் போக்குவரத்திற்கு பெருமளவு பணத்தை செலவிடவேண்டியுள்ளதால், அந்த வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கு வைத்தியர்கள் மிகவும் தயக்கம் காட்டுவதாக யாழ். தீவகப் பகுதி வைத்தியசாலைகளின் வைத்தியர் சங்கத்தின் செயலாளர் எஸ். நிஷாந்தன் கூறியுள்ளார்.

டிசம்பர் 9, 2022 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு வருமான வரி (திருத்த) சட்டத்திற்கு அமைய, மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதோடு, ஒரு இலட்ச ரூபாய் வரை மாத வருமானம் பெறுபவர்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக சுட்டிக்காட்டிய வைத்தியர் எஸ்.நிஷாந்தன், யாழ்ப்பாணத் தீவுகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு கடுமையான பற்றாக்குறைக்கு நிலவுவதாகவும், அந்தத் தீவுகளுக்குச் செல்வதற்கு வைத்தியர்கள் அதிக போக்குவரத்துச் செலவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புங்குடுதீவு, வேலணை, ஊர்காவத்துறை, காரைநகர், எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் வைத்தியர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும் இதனால் அந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

காரைநகர் வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் ஒருவர் விலகியுள்ளதாகவும், அனலைத்தீவு வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் அங்கு பணிக்கு சமூகமளிக்காமலேயே விலகியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தியர் நிஷாந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.

வேலணை வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுவதுடன் அவரும் வெளியேறத் தயாராகி வருவதால் வைத்தியசாலை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, நெடுந்தீவு வைத்தியசாலையிலும் ஒரு வைத்தியரே கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீவுகளில் பயணச் செலவுகளுக்கு மேலதிகமாக, உணவுப் பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளதாக  ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த வைத்திய சங்கத்தின் செயலாளர், தீவுகளில் உள்ள வைத்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விரைவான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தியர் நிஷாந்தன் கோரியுள்ளார்.

யாழ். தீவக மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள டக்ளஸ் தேவானந்தா தற்போதைய அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சராக உள்ளார்.

தனியார் சேவைகளை வழங்கும் வைத்தியர்கள் உட்பட தனியார் சேவை வழங்குனர்களும் புதிய வரி திருத்தத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் சேவைகள் பிரதி ஆணையாளர் எஸ். எஸ். டி. வீரசேகர கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி