குற்றமற்றவர்களையும் சிறைக்குள் தள்ளி குற்றவாளியாக்கவும், குற்றம் சுமத்தாது வருடக் கணக்காக தடுத்து வைக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் (Father Sakthivel) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தினால் ஒருவரின் வாழ்வை சிதைக்கவும், பறிக்கவும், அழிக்கவும், ஏன் கொலை செய்யவும் முடியும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமே சில நாட்களுக்கு முன்னர் விடுதலை பெற்ற அரசியல் கைதியான கதிரவேற்பிள்ளை கபிலனின் கைதும், 12 வருட சிறை வாழ்வும் எனலாம்.

கபிலன் தனது 29ஆவது வயதில் விடுதலை பெற்றுள்ளார். 12 வருட சிறை வாழ்க்கை 18 வயதை எட்டிப் பிடிக்காத பிள்ளைப் பருவத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படாது 12 வருட சிறை வாழ்வை அனுபவித்தது எத்தனை கொடூரமானது. குற்றமற்றவர்களையும் சிறைக்குள் தள்ளி குற்றவாளியாக்கவும், குற்றம் சுமத்தாது வருடக் கணக்காக தடுத்து வைக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முடியும்.

இச்சட்டத்திற்கு மனித முகம் கிடையாது என்பது மட்டுமல்ல ஜனநாயக முகத்தோடு நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இச்சட்டத்தை பாதுகாத்து வரும் ஆட்சியாளர்களுக்கும் மனித முகம் கிடையாது என்பதுவே இதன் வெளிப்பாடு.

இதனை திருத்தம் செய்து பாதுகாக்க முயற்சிக்கின்றனர். இதனையே சர்வதேச சமூகமும் பார்த்து கொண்டிருக்கின்றது. இது மனித நாகரீகத்திற்கு அவலமாகும்.

நாட்டின் நீதி சட்டத்தின் காவலர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் 12 வருட காலமாக குற்றவாளியாக்க எடுத்த முயற்சி தோல்வி கண்ட நிலையிலேயே சில நாட்களுக்கு முன்னர் கபிலன் விடுதலையாகியுள்ளார்.

நீதி என்பது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூரமாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இதனாலேயே தசாப்தங்கள் கடந்தும் அரசியல் கைதிகள் சிறைக்குள் எதிர்காலம் தெரியாமல் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் சிறையில் இருந்து வெளியில் வந்த அரசியல் கைதிகள் பலரை சந்தித்த போது அவர்களின் விரக்தி வாழ்வு வெளிப்பட்டது.

புலனாய்வு கண்கள் எப்போதும் கண்கொத்திப் பாம்பைப் போன்று அவர்களை நோக்கியே இருப்பதாக உணர்வதோடு ஒரு வித பயம் அவர்கள் மனதில் தொடர்ந்துள்ளதை உணரக் கூடியதாக இருந்தது.

அதுமட்டுமல்ல சிறையில் உள்ள அரசியல் கைதிகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நோயில் பாதிக்கப்பட்டு உளரீதியான பாதிப்போடு எதிர்காலம் தெரியாது வாழ்வதாக வேதனையோடு குறிப்பிட்டனர்.

கபிலன் மற்றும் இவரைப்போன்ற அரசியல் கைதிகளின் வாழ்வை பறித்து, சிதைத்து, கொலை செய்தவர்களுக்கு நீதி தேவதையின் தண்டனை கிடைக்குமா? மனிதகுலம் ஏற்காத போர்க்குற்றம் புரிந்தவர்கள் நட்சத்திரங்கள் சூடி அதிகார நாட்களில் இருப்பது மட்டுமல்ல, இத்தகையவர்களை பாதுகாப்போம் என்று கூறியே பேரினவாதிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து முழு உலகையும் ஏமாற்றி வருவதை நாம் அறிவோம்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை வருடாந்த திருவிழாவை கைவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு இடமளிக்காது பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுவதுமாக அகற்றி அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும்.

அத்தோடு அரசியல் கைதுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதோடு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கும் தொடரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பென ஏற்று அரசியல் நீதியை உறுதிப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி