முதன் முறையாக, தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் இலங்கையில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானம் மேற்கொள்ளும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஆ.ஸ்வஸ்திகா ஜூலை 20, 2021 அன்று, இருபது வருட வரலாற்றைக் கொண்ட, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்போடு இணைந்த ஒரு தொழிற்சங்கமான வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளராகவும் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் தொழிற்சங்கப் பிரதிநிதியான ஸ்வஸ்திகா, தனது முதல் சந்திப்பின் அனுபவங்களை ஊடகங்களுக்கும் வெளியிட்டுள்ளார்.

"என்னைத் தவிர முழு கூட்டத்திலும் சுமார் 5 பெண்கள் இருந்தனர். அவர்கள் தொழில் திணைக்களம், முதலீட்டுச் சபை போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் என்பதை நான் அறிந்துகொண்டேன். எனவே தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு தான் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், பெண்கள் தலைமையிலான பல அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட பிரதிநிதிகள் ஆலோசனை சபையில் கலந்தாலோசிக்கப்படாத பல பிரச்சினைகளை தன்னுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ள ஸ்வஸ்திகா சபைக்கு அவர்கள் கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகள் உதவுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் எப்போதும் தொழிற்சங்கங்களை வழிநடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்வஸ்திகா

தொழிற்சங்கத் தலைவராக பெண்கள் முன்னேறுவதற்கு தடைகள் காணப்படுவதோடு, ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

"சில ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் பெண்கள் பிரதிநிதியாவதற்கான முயற்சியைக் கூட  தீவிரமாக தடுக்கிறார்கள் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்."

சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்களின் கூற்றுப்படி, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை 1995 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

இது தொழில் திணைக்களம், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் முதலாளிகளைக் கொண்ட ஒரு அமைப்பு.

நாட்டில் தொழிலாளர்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொழில் அமைச்சர் மூலம் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தகம் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம்,

தேசிய ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,  இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், கூட்டு தோட்டத் தொழிலாளர் சங்கம், உள்ளிட்ட 14 தொழிலாளர் அமைப்புகள், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் அங்கம் வகிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி