மட்டக்களப்பு வாழைச்சேனை பொதுச்சந்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உரப் பையில் கட்டப்பட்ட பொதியை நண்பர் ஒருவர் கொண்டு வந்து வைத்துவிட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாக சொல்லி விட்டு சென்றதாகவும், திரும்ப வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

தனது வர்த்தக நிலையத்தில் வைக்கப்பட்ட பொதியில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை அந்தப் பெண்ணின் குடும்ப உறவினர்களும் அந்த உரப் பையை கடையில் வைத்த நண்பரும் பொலிஸ் நிலையத்தில் இருந்துள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி சந்தேக நபரும், வர்த்தக நிலைய உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியை சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்ற 55 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். இப்பெண்ணிடம் கொலையாளி நகையை பெற்று அடகு வைத்ததாகவும் அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து நகையை மீட்டுத் தருவதாக கொலையாளி கூறி பெண்ணை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அழைத்து சென்றுள்ளார். சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ் வீதிலுள்ள சந்தேக நபரின் அலங்கார மீன் வளர்ப்பு கடைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து கொலை செய்து உரப்பையில் போட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சடலத்தை தடையம் இல்லாமல் செய்யும் நோக்கிலும் சந்தேகம் ஏற்படாத வண்ணமும் வாழைச்சேனையிலுள்ள நண்பரொருவரின் வளர்ப்பு மீன் கடையில் பெண்ணின் சடலத்தை வைத்து இரவு வேளையில் எடுத்துச் செல்லும் வகையில் வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல், சம்பவ இடத்துக்கு வருகை தந்து கொலை செய்யப்பட்ட வர்த்தக நிலையம் மற்றும் சடலம் இருந்த வர்த்தக நிலையம் என்பவற்றை பார்வையிட்டதுடன், பெண்ணின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவினர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சானக வென்கம, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி