உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் தலைவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சியை தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

20 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமான வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியத் தலைவர்கள் மீது அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பு அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் இனவெறித் தாக்குதல்களை ஏனைய தொழிற்சங்கங்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. 

அரசாங்கத்தின் அண்மைய தாக்குதல் "2009இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் வெற்றியை நாசப்படுத்த முயன்ற தரப்பு, இப்போது 12 வருடங்கள் கழித்து தொழிற்சங்க இயக்கங்களின் போராட்டங்களுக்கு பின்னால் இருந்து சூழ்ச்சி செய்கின்றன.” என சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருமான சாரக காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை புலி முத்திரை குத்தி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக  ஒடுக்குவதற்கான முயற்சியே இது என்பதை காட்டுவதாக, பயிற்சி கல்லூரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

”நிதி இல்லாத கதையை ஏற்கும் அளவுக்கு ஆசிரியர்கள் முட்டாள்கள் இல்லை, ஆகவே போராட்டம் தொடரும். அதேபோல், இப்பொழுது புலிகளின் தோல்விக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களின் நவீன சூழ்ச்சியே ஆசிரியர்களின் போராட்டம் என்பதை ஆளும் கட்சியின் செயலாளர் காட்ட முயல்கின்றார். அதாவது நாம் அனைவரும் ஆசிரியர் சங்கங்கள், ஆகவே தலைவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஒடுக்க முயற்சிக்கின்றார்கள்.

இந்த வழியில் பேச்சுவார்த்தைகளை, கைவிட்டு அடக்குமுறையை ஆரம்பிக்க, எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவது அவமானகரமானது.” என பயிற்சி கல்லூரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஷான் தில்ருக்சியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

"போரின் வெற்றியைத் தடுக்க முயன்ற அதே குழு இப்பொழுது நாட்டில் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்களின் அலையை உருவாக்க முயல்கிறது" என ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் கொள்கை முன்மொழிவுகள் கோரிக்கையை ஏற்று அதனை செயற்படுத்த முடியாமைக்கு காரணம், நிதிப் பிரச்சினையே என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஆளுங்கட்சித் தலைவர்கள் இதுபோன்ற அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிடுவது ஆச்சரியமளிப்பதாக ஷான் தில்ருக்சியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் நியாயமான உரிமைகளுக்காக வெற்றிகரமான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் போதும், இந்த விடயத்தில் முன்னிற்கும் தலைவர்களுக்கு சேறு பூசி அவர்களுக்கு தண்டனை வழங்கி அடக்குமுறை மூலம் அவற்றை தடுக்கும் முயற்சிகள் நீண்ட காலமாக செயற்படுத்தப்படுவதாக, வைத்திய ஆய்வுகூட சேவை தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்  குறிப்பிட்டுள்ளார்.

"உலகில் அல்லது இலங்கையில் எந்த அரசாங்கமும் இத்தகைய அடக்குமுறையை பயன்பத்தி ஒரு சரியான தீர்வைக் கண்டதில்லை. ஆளும் கட்சியின் செயலாளர் மீண்டும் பிரிவினைவாதப் போரைப் பற்றி பேசிய விடயம் இதனை மீண்டும் நிரூபித்துள்ளது” என ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

மூன்று இலட்சம் ஆசிரியர், அதிபர்களின் முழு போராட்டத்தையும் சூழ்ச்சி என அழைப்பது சாகர காரியவசத்தின் உணர்ச்சி பலவீனத்தின் வெளிப்பாடு எனவும், இந்த பலவீனத்தை அவர் வெளிப்படுத்துவது இது முதன்முறை அல்ல எனவும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள், குறிப்பாக போராட்டத்தை வழிநடத்துபவர்கள் அவதூறு மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். இந்த போராட்டங்களுக்கு விசேட இலக்குகள் இல்லை. எனவே தொழிற்சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒவ்வொரு அரசாங்கத்துடனும் போராடுகின்றன. எனினும், முழு ஆசியர் சங்கமும் வீதிக்கு இறங்கியுள்ளதால், இந்த போராட்டத்திற்கு புலி முத்திரை குத்தப்பட்டுள்ளது இது விசேடமான ஒரு விடயம்” ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு வலுவான வெகுஜனப் போராட்டம் என்பது ஜனநாயகப் போராட்டம், இது அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல, ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கும் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

"சேறு பரப்பும் பிரச்சாரகர்கள், சமூக ஊடகத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மேலும் தொலைபேசி மூலம் மக்களை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்துகிறவர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு நிறையவே பணம் வழங்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் நியாயமான உரிமைகளை வழங்குதல் மற்றும் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை உருவாக்குதல் இதனைவிட இலாபமான விடயமாக அமையாதா? என நான் கேட்க விரும்புகின்றேன். ”

இனப்படுகொலைப் போர்களுக்கு எதிராக மக்களின் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க தான் முன்நிற்பதாககபோரின் வெற்றியைத் தடுக்க  முயன்ற குழுக்கள் நாட்டில் வேலைநிறுத்த அலைகளை உருவாக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியதற்கு பதிலளித்த, இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மயூர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

" நாங்கள் இனப்படுகொலை போர்களுக்கு எதிராக மக்களின் உயிர்களையும் அவர்கள்  நியாயமாக தேடிப்பெற்றவற்றையும் பாதுகாக்கவே முன்நிற்கின்றோம். அவ்வாறு செய்வது தவறு என்றால், அந்தப் போர்களுக்கு எதிராக நாங்கள் வேலை செய்தோம் என சொல்வதற்கு முன், புத்தர், இயேசு புலிகளை ஆதரித்த ஒரு சூழ்ச்சிகாரர் என அந்த மதங்களை தடை செய்வதற்கான திட்டங்களை ஆரம்பியுங்கள். இல்லையெனில், இன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள் இந்த அறிஞர்களின் மதத்தை ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகளுக்கு முன்னர் போரை எதிர்த்தவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரை சீர்குலைத்தவர்கள் இர தரப்புமே ஒன்றுதான் என முன்மொழிவதே உண்மையான சூழ்ச்சி”

"உங்கள் சொந்த கருத்திற்கு அமைய உங்கள் தரப்பிலேயே சூழ்ச்சி காணப்படுகின்றது என்பதைக் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. உங்கள் அரசாங்கம் புலிகளை தோற்கடித்தமைக்காக, எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவா எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது” என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர் சங்கத் தலைவர்களுக்குத் தொல்லை

கல்வியின் இராணுவமயமாக்கல் மற்றும் தீர்க்கப்படாத கல்வி மற்றும் ஆசிரியர்-அதிபர் பிரச்சினைகளுக்காக போராடியதால், தொற்றுநோய் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தெற்கின் செயற்பாட்டாளர்கள், ஒன்பது நாட்கள் வடக்கின் விமானப்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

28ஆம் திகதி மாலை 5.25 மணியளவில் கொரியாவிலிருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பின் ஊடாக, தன்னை நாயைப் போல கொலை செய்து வீதியில் வீசுவதாக  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

24 வருடங்களாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் சம்பள ஏற்றத்தாழ்வு மாத்திரமன்றி, 60 சதவிகித மாணவர்கள் இணையவழி கல்வியை கைவிட்டுள்ள விடயம் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்திற்கு தலைமை தாங்குவதால், அரசாங்கம் தன்னை அச்சுறுத்துவதற்கு இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்களை செயல்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையிலும் ஜோசப் ஸ்டாலின் மற்றும் தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஊடாக  கீழ்த்தரமான சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி