ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, பொலிஸாரினால் சுகாதாரப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக, தொற்றுநோயை தடுப்பதில் முன்னின்று செயற்படும் சுகாதாரத்துறை தலைவர், பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியர்கள் என்ற போர்வையில், 'போலி முத்திரைகள்'களுடன் வாகனங்கள் செலுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, கடந்த 24ஆம் திகதி கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின்போது வாகனங்களை பரிசோதிக்க உத்தரவிட்டார்.

“இன்றும் நான் வரும்போது நிறைய வாகனங்கள் இருந்தன. இதன் பொருள் மக்கள் இந்த பொறுப்பை ஏற்கவில்லை என்பதே. நான் காத்திருந்தேன். சிலர் அவர்களின் வாகனங்களில் தங்களை வைத்தியர் என அடையாளப்படுத்தியுள்ளனர்.  இவ்வளவு வைத்தியர்கள் வீதியில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.  வைத்தியரின் பெயர், அவர் எங்கு பணிபுரிகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பொய்யர்கள் அந்த முத்திரையை ஒட்டிக்கொண்டு செல்கிறார்கள்”

இந்த அறிக்கையின் பின்னர், அத்தியாவசிய சுகாதார சேவையில் உள்ள ஊழியர்கள், வீதியில் உள்ள பொலிஸாரால் துன்புறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சுகாதார சேவைகளுக்காக தமது வாகனங்களில் சுகாதார நிறுவனங்களுக்கு வரும் பிற வைத்தியரல்லாத சுகாதார நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் வீதியில் பொலிஸாரினால் தடுக்கப்படுவதோடு, தேவையற்ற விசாரணை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

"இதற்கமைய, சில பொலிஸ் அதிகாரிகள் ஒரு சுகாதார நிறுவனத்தின் சின்னத்துடன், அனுமதித் பத்திரம் பெற்ற வாகனங்களில் வைத்திய அதிகாரிகள் பயணிக்க முடியும் எனவும் ஏனைய சுகாதார நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் சேர்க்கப்படவில்லை எனவும் கருதுகின்றனர்."

சுகாதார சேவை என்பது ஒரு கூட்டு சேவை எனவும் வைத்திய அதிகாரிகளால் மாத்திரமல்ல என்பதை பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும், பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் கருத்து காரணமாக இருக்கலாம் எனவும், சுகாதார வைத்திய சேவை நிபுணர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மேலும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், வைத்தியசாலை சின்னங்களைக் கொண்ட வாகனங்கள் பரிசோதிக்கப்படுவதைக் குறிப்பிடும்போது ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் பெயர்களைக் குறிப்பிடாமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதோடு, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையை, நாட்டின் சட்டமாக மாற்றியமைப்பது மிகவும் தீவிரமான விடயமாகும்.”

ஒரு சுகாதார நிறுவனத்தால் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவது, ஒரு நபரின் தகுதியை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை எனவும், மாறாக வாகனம் குறித்த நிறுவனத்திற்குள் நுழையவும், நிறுத்தி வைக்கவும், அந்த வாகனத்தின் உரிமையாளர் குறித்த வைத்தியசாலையின் ஊழியர் என்பதை  உறுதிப்படுத்தவுமே வழங்கப்படுவதாகவும் தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இலங்கை பொலிஸாரோ அல்லது வேறு எந்த தரப்பினரோ வைத்திய அதிகாரிகள் மாத்திரமே வாகனங்களில் வர வேண்டும் அல்லது வைத்திய அதிகாரிகள் மாத்திரமே வைத்தியசாலையில் இருக்க வேண்டுமென நினைத்தால், கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் தனிப்பட்ட வாகனங்களில் பொது சேவைக்கு வரும் அதிகாரிகள் அவசியமற்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால், அவர்கள் வீட்டில் இருந்தவாறு தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென, ரவி குமுதேஷ், பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு சுகாதார சேவை சின்னத்தை கொண்டுள்ள ஒருவர் சுகாதார சேவையாளரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான சோதனைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றாலும், ஒருவர் வைத்தியரல்லாத நிலையில் துன்புறுத்தப்படும் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிகர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும்,  வீதியில் சுகாதார ஊழியர்கள் அனைவரையும் சமமாக நடத்துமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும், இல்லையெனின், சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், ஒன்றிணைந்து, இந்த விடயத்திற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுப்பது என தீர்மானித்துள்ளதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் சேவைகள் சங்கத்தின் தலைவர்  ரவி குமுதேஷ், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிரதி, ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி