இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கொவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய திரிபு "மிக ஆபத்தானது" என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார்.

வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில அந்த வைரஸ்களை அதிக பரவும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக் கொவிட்-19 கண்டறியப்பட்டது தொடங்கி இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் பிறழ்வுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

"வியட்நாமில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் வகை, பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸின் வகை என இரண்டு வைரஸின் தன்மைகளையும் கலந்த ஒரு புதிய கோவிட் 19 வகை கண்டறியப்பட்டுள்ளது," என அரசாங்க கூட்டம் ஒன்றில் வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை, பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது எனவும் குயேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த வகை வைரஸ் குறித்துத் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்ததாக இணைய செய்தி வலைதளமான விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸின் ஜெனிட்டிக் கோட் விரைவிலேயே கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

பலன் தரும் தடுப்பு மருந்துகள்

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் B.1.617.2 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இந்த வகை பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக் கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர்.

ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்துகள் இந்த வகை வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன ஆனால் இரு டோஸும் செலுத்திக் கொண்டபிறகுதான் அவை பலனளிக்கின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

அதேபோன்று பெரும்பான்மையான மக்கள் மீது எந்த ஒரு வகை கொரோனா திரிபும் மிக மோசமான உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை.

ஆனால் அதிகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் வகை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு இடையில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும்.

வியட்நாம்

வியட்நாம்

வியட்நாமில் கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெருந்தொற்று பரவல் தொடங்கி இன்றுவரை அந்நாட்டில் 6,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பாதிக்கு மேல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி பாதிக்கப்பட்டவர்கள்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகள்படி வியட்நாமில் இதுவரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிகிறது.

குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 304 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி