இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னர் அது, நேற்று முன்தினம், அதாவது திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.

“இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக, பேரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடுகளை விட, அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாடுகளே அதிகம்” எனக் கூறிக்கொண்டு இருந்த இலங்கை அரச தலைவர்களும் அதிகாரிகளும், பின்னர் நிலைமை மாறிவிட்டதை ஒப்புக் கொண்டனர்.

அரச தலைவர்கள், இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறை, விந்தையானது என்றே கூற வேண்டும். ஒருபுறம், தாம் பிரேரணையை நிராகரிப்பதாகக் கூறிய அதேவேளை, மறுபுறம், அப்பிரேரணையைத் தோற்கடிக்கப் பேரவையின் உறுப்பு நாடுகளின் உதவியையும் நாடினர். 

ஒருபுறம், அவ்வாறு சில நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் உள்நாட்டில் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளும் அரசாங்கம், அதேவேளை, அதே நாடுகளைச் சினம் கொள்ளச் செய்யும் நடவடிக்கைகளையும் எடுக்கின்றது. 

உதாரணமாக, முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடிய அரசாங்கம், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்தது.அதேவேளை, சில முஸ்லிம் பெண்கள் அணியும் ‘புர்கா’ எனப்படும் முகத்திரையைத் தடை செய்யப் போவதாக அறிவித்தது. பின்னர், அவ்வாறானதொரு முடிவு இல்லை எனக் கூறியது.

இதேபோல், இந்திய அரசாங்கத்தின் உதவியையும் அரச தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அத்தோடு, முறையான அதிகாரப் பரவலாக்கல் முறைமையொன்றை அமுலாக்க வேண்டும் என, இந்தியா பல முறை இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருந்த நிலையில், மாகாண சபைகளை ஒழிக்கப் போவதாகத் தெரிவித்தனர். பின்னர், “இல்லை... இல்லை, விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப் போகிறோம்” என்று கூறினர். 

இந்தப் பிரேரணை மட்டுமல்லாது, இதற்கு முன்னர் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளும், இலங்கையின் உள்நாட்டு அலுவல்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் என்றும் அவை நாட்டின் இறைமையை மீறுவதாகவும் அரச தலைவர்கள் கூறுகின்றனர். அதனாலேயே தாம் அவற்றை நிராகரிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அரச தலைவர்கள் நாட்டின் இறைமையைப் பாதுகாக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. சுகாதாரத் துறையினரின் ஆலோசனைப் படியே, கொவிட்-19 நோயால் மரணித்தவர்களின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்ய வேண்டும் என்ற முடிவைத் தாம் எடுத்ததாக அவர்கள் கூறி வந்தனர். 

ஆனால், மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் ஆரம்பமாகி, அதில் உரையாற்றிய 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச் செய்லாளர் யூசப் அல் ஒதைமீன், “இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இலங்கை முஸ்லிம்களின் உரிமை, வழங்கப்பட வேண்டும்” எனக் கூறிய போது, அந்த நெருக்குதலை ஏற்று, அரசாங்கம் அடக்கம் செய்வதை அனுமதித்தது. 

இதேபோல், மனித உரிமைகள் பேரவையின் இந்தியப் பிரதிநிதி இந்திர மணி பாண்டே, “இலங்கையில் முறையான அதிகார பரவலாக்கல் முறை அமலாக்கப்பட வேண்டும்” எனத் தமது உரையில் கூறியதை அடுத்து, மேலே குறிப்பிடப்பட்டதைப் போல், இலங்கை அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப் போவதாக அறிவித்தது. உள்நாட்டு விடயங்களை, வெளிநாட்டவரின் நெருக்குதலுக்கு ஏற்ப செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்குமாயின், இறைமை என்று இவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள்?

இலங்கையில் பல பொருளாதார திட்டங்களை, அரசாங்கம் சீனாவிடம் கையளித்துள்ளது. இந்த நிலையில், மேலும் சில திட்டங்களை இந்தியாவிடம் கையளிகக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அரசாங்கம் உள்ளாகியுள்ளது. உண்மையிலேயே, இலங்கை இறைமை உள்ள நாடாக இருந்தால், நாம் விரும்பிய நாட்டுடன் சேர்ந்து, நமது பொருளாதாரத் திட்டங்களை அமுல் செய்ய எம்மால் முடிந்திருக்க வேண்டும். அதன்நிமித்தம், மற்ற நாடுகள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் நாம் இருக்க வேண்டும். இந்தியாவோ சீனாவோ, பிரச்சினைகளை உருவாக்கிவிடுமே என்று பயந்து, அந்நாட்டுக்கும் நமது பொருளாதார திட்டங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படுமேயானால் அது என்ன இறையாண்மை? 

2012ஆம் ஆண்டு, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை தொடர்பாக, முதலாவது பிரேரணையை முன்வைத்த போதும், “இறையாண்மை பாதிக்கப்படுகிறது” என்று கூறி, அரசாங்கம் அதை நிராகரித்தது. ஆனால், அந்தப் பிரேரணையின்படி பேரவையின் அடுத்த கூட்டத்துக்கு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பானதொரு வேலைத் திட்டத்தை முன்வைத்தது. இது இறையாண்மைக்கு முரணானது இல்லையா?

கடந்த வருடம், அதற்கு முன்னைய மூன்று பிரேரணைகளுக்கு முன்னைய அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை அரசாங்கம் வாபஸ் பெற்றது. ஆனால் அந்தப் பிரேரணைகளின்படி, நிறுவப்பட்ட காணாமற்போனோருக்கான அலுவலகத்தையும் (OMP) மறுசீரமைப்பு (Reparation) அலுவலகத்தையும் தொடர்ந்து நடத்துவதாகவும் அறிவித்தது. தாம் நாட்டின் இறைமையைப் பாதிக்கும் பிரேரணைகளாக வர்ணிக்கும் ஆவணங்களில் உள்ளவற்றை அரசாங்கம் நிறைவேற்ற முன்வருவதாக இருந்தால், அரச தலைவர்கள் இறைமை என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கோ, சர்வதேச அமைப்புகளுக்கோ உரிமை இல்லை என்பதே இப்போது அரசாங்கத்தில் நிலைப்பாடாக உள்ளது. இக்கருத்தை, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அரச தலைவர்கள் கூறி வந்தனர். ஆயினும், அதே மஹிந்த 1989 ஆம் ஆண்டு என்ன செய்தார் என்பதை, மக்கள் மறந்துவிட்டார்கள் என அத் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும்! 

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி நடைபெற்று வந்த அக்காலத்தில், நாட்டின் தென் பகுதிகளில் வீதியோரங்களிலும் ஆறுகளிலும் இளைஞர்களின் சடலங்கள் காணப்பட்டன. பல பகுதிகளில் புதைகுழிகளில் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்போது காணாமற்போனோரின் எண்ணிக்கை 64 ஆயிரம் என, அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின. 

அக்காலத்திலும், ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடைபெறும் போது, இப்போது தமிழ் அமைப்புகள் செய்வதைப் போல் மஹிந்த ராஜபக்‌ஷவும் வாசுதேவ நாணயக்காரவும் காணாமற்போன ஆயிரக் கணக்கானவர்களின் விவரங்களைச் சேர்த்துக் கொண்டு, ஜெனீவாவுக்குச் சென்றார்கள். அப்போது, தமது செயல் வெளிநாட்டு தலையீட்டை வரவழைப்பதாக அமையும் என்று மஹிந்த நினைக்கவில்லைப் போலும். அல்லது, அப்போது நாட்டின் இறையாண்மை என்று ஒன்று இருக்கவில்லையா? 

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளில் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பதும், அதற்காக மனித உரிமைகள் பேரவை, சாட்சியங்களைத் திரட்ட வேண்டும் என்பதுமே இம் முறை மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்சலேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தவற்றில் இலங்கைத் தலைவர்களை அச்சமூட்டும் கருத்துகளாகும். அத்தோடு அவ்வாறு மனித உரிமை மீறியோரின் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்பதும் அச்சமூட்டும் மற்றொரு கருத்தாகும். 

ஆனால், லிபியா, ஈராக், சூடான் போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக எடுத்ததைப் போன்ற பாரதூரமான நடவடிக்கைகளை, இலங்கை தலைவர்களுக்கு எதிராக, ஐ.நா எடுக்கப் போவதில்லை என்பது தெளிவான விடயமாகும். எனினும், தனிப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. அதற்கு உதாரணங்களும் உள்ளன.

முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையோடு, சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று, ஆறு வருட சிறைத் தண்டனை விதித்தது. கடந்த மாதம் 24ஆம் திகதி மற்றொரு ஜெர்மன் நீதிமன்றம் சித்திரவதை செய்தமைக்காக சிரியாவின் அரச உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு நான்கரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

சீனாவின் உயிகுர் மாநில முஸ்லிம்களின் மனித உரிமைகளை மீறியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் திங்கட்கிழமை (22) நான்கு சீன அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரம், பயணம் ஆகிய தடைகளை விதித்தது. அன்றே ஐரோப்பிய ஒன்றியம், மியான்மாரில் இராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்டதற்காக 11 மியான்மார் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, அதே தடைகளை விதித்தது. ஹொங்கொங்கில் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டதற்காக அமெரிக்கா கடந்த 17 ஆம் திகதி, 24 சீன, ஹொங்கொங் அதிகாரிகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இலங்கை விடயத்திலும் மனித உரிமைகள் பேரவையின் பிடி, பெரியளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவேனும் இறுகி வருவதையே காணக்கூடியதாக இருக்கிறது. 

இந்த நிலையில், இறையாண்மை என்ற கவசம் தாங்குமா என்பது கேள்விக்குறியே. எனவேதான், இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இலங்கை தலைவர்களை விரட்டி வரும் என்றும் ஆகவே உள்நாட்டு பொறிமுறையொன்றின் மூலம், மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும் என்றும் இறுதிப் போரின் போது இராணுவத் தளபதியாகவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த வாரம் தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது கூறியிருந்தார் என்பதும், கருத்தூன்றி நோக்கப்பட வேண்டியதாகும். 

 

-எம்.எஸ்.எம். ஐயூப்

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி