அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பார்க்கவோ பகிரவோ முடியாத படி, அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம் தன் பயனர்களை முடக்கி இருக்கிறது.

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் பக்கங்களை,அவுஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்கும் பயனர்களும் பார்க்க முடியாத படி தடை செய்திருக்கிறது பேஸ்புக்.

இன்று காலை முதல் அவுஸ்திரேலியாவில் இருக்கும் பயனர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் சில அவுஸ்திரேலிய அரசின் பக்கங்களைப் பார்க்கவோ பகிரவோ முடியாதபடி தடை செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்படி தடை செய்வது பேஸ்புக் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது என அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

செய்திகளுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிற அவுஸ்திரேலியாவின் புதிய 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' சட்டத்துக்கு பதிலளிக்கும் விதத்தில், பேஸ்புக்கின் இந்தத் தடை நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்

ஊடக நிறுவனங்களின் செய்திகளை கூகுள், பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு, ராயல்டி என்றழைக்கப்படும் ஆதாய உரிமைத் தொகையை ஊடக நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என இந்த சட்டத்தின் மூலம் கூறுகிறது அவுஸ்திரேலிய அரசு. ஆனால் அதை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம், இணையம் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் தங்கள் மீது அபராதம் விதிக்கிறது என, கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வாதாடின.

ஆனால் அவுஸ்திரேலிய அரசு தரப்போ கேட்பதாக தெரியவில்லை. நேற்று (பெப்ரவரி 17-ம் தேதி, புதன்கிழமை) தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்கு கூகுள்,பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிற புதிய சட்டத்தை, அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றிவிட்டது அரசு.

`தேடுபொறி சேவையை நிறுத்திக் கொள்வோம்` - மிரட்டும் கூகுள்; அடிபணிய மறுக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறப் போவதாக அச்சுறுத்தும் கூகுள் - எந்தளவு சாத்தியம்?

"பேஸ்புக்கின் இது போன்ற செயல்பாடுகள், அதன் நோக்கம் மற்றும் அதன் மதிப்புக்கு என்ன மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்கும் என்பதை பேஸ்புக் மிகவும் எச்சரிக்கையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என ஆஸ்திரேலியாவின் தொலைதொடர்புத் துறை அமைச்சர் பால் ப்லெட்சர் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இன்று (பெப்ரவரி 18, வியாழக்கிழமை) காலை முதல், காவல் துறை, அவசர உதவி, சுகாதாரத் துறை, வானிலை ஆய்வு மையம் என பல அரசுத் துறையின் பேஸ்புக் பக்கங்கள் பல ஆஸ்திரேலியர்களால் அனுக முடியவில்லை.

பல அவுஸ்திரேலியர்களால் நம்பகமான மற்றும் அதிகாரபூர்வமான முகமைகளை அணுக முடியாததற்கு, உடனடியாகவே எதிர்வினைகள் எழும்பத் தொடங்கி இருக்கின்றன.

"பேஸ்புக் ஓர் அடக்குமுறை அரசு போல செயல்படுகிறது. அவுஸ்திரேலியர்களுக்கு பேஸ்புக்கில் செய்தி பரவலை கட்டுப்படுத்துகிறது, சென்சார் செய்கிறது" என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த எலென் பியர்சன் கூறினார்.

"வியாழக்கிழமை, பேஸ்புக்கின் முதன்மைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க்குடன், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது" என அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"அவுஸ்திரேலிய அரசின் 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' சட்டத்தில் உள்ள சில சிக்கல்களைக் குறித்து மார்க் சக்கர்பெர்க் பேசினார். இந்த சட்டம் தொடர்பான பிரச்னைகளைக் குறித்து தொடர்ந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம் என அரசு தரப்பில் சம்மதித்துள்ளோம்" எனக் கூறியுள்ளார் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க்.

அவுஸ்திரேலியாவில் கூகுளின் தேடுபொறி சேவையை நிறுத்திவிடுவேன் என அச்சுறுத்திக் கொண்டிருந்த கூகுள், சமீபத்தில் ரூபர்ட் மர்டாக் செய்தி நிறுவனத்துக்கு புதிய சட்டத்தின் கீழ் பணம் கொடுக்க சம்மதித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் கூறியது என்ன?

"அவுஸ்திரேலிய அரசு கொண்டு வரும் சட்டம் எங்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை. ஒன்று அரசு கூறும் சட்டத்தைப் பின்பற்றுவது அல்லது நாங்கள் அவுஸ்திரேலியாவில் வழங்கும் சேவையில் செய்தி ஊடகங்களை அனுமதிப்பதை நிறுத்துவது என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. வருத்தத்துடன் நாங்கள் இரண்டாவது வாய்ப்பைத் தேர்வு செய்கிறோம்" என பேஸ்புக் தரப்பில் இருந்து நேற்று (பெப்ரவரி 17, புதன்கிழமை) ஒரு வலைப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதன் படி, அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேஸ்புக் பயனர்கள், செய்திகளைப் பார்க்கவோ அல்லது மற்றவர்களுக்கு பகிரவோ முடியாது. அதே போல அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் பேஸ்புக்கில் தங்கள் செய்திகளை பகிர முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது பேஸ்புக்.

உலக அளவில் அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தில் செய்தி பகிர்வது தடுக்கப்பட்டிருக்கிறது எனவும்  பேஸ்புக்கின் அப்பதிவு குறிப்பிடுகிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி