தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது. கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் தேதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கிழக்கு மாகாணம் முழுவதும் பயணித்து, பின்னரான காலத்தில் வடக்கு மாகாணத்தில் நிறைவடைந்திருந்தது.

தமிழர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில், ஆரம்ப நாள் முதலே முஸ்லிம்களும் இணைந்துகொண்டிருந்தனர்.

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய இந்த போராட்டம், அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்டது.

இறுதி நாளான இன்று, கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முகமாலையூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேரணியை, பெருந்திரளான மக்கள் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

வடக்கு - கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், மாணவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் பல்வேறு பொலிஸ் பிரிவுகளில், இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

நீதிமன்ற உத்தரவுகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் காண்பித்த போதிலும், அதனையும் மீறி, போராட்டக்காரர்கள் தமது இறுதி எல்லையை நோக்கி நகர்ந்திருந்தார்கள்.

அதேவேளை, போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம் முதல் இன்றைய தினம் வரை அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் பகிரங்கமாகவே போராட்டங்களை ஒளிப்பதிவு செய்துக்கொண்டனர்.

மேலும், போராட்ட பேரணிக்கு சென்ற வாகனங்கள் பயணிக்கும் வழிகளில் ஆணிகளை சிலர் வீசியிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, இன்றிரவு இந்த போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

இறுதியாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நினைவாக, யாழ்ப்பாணம் - பொலிகண்டி பகுதியில் நினைவு கல்லொன்றை வைக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது

எனினும், நினைவுக்கல், சிலரால் சூரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்

பொலிகண்டியில் இன்றிரவு போராட்டக்காரர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலத்தில், தமிழர்களின் போராட்டம் மீண்டும் வலுப் பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தற்போது இந்த போராட்ட வடிவம் மாறியுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டமானது, தமிழர்களின் உரிமை போராட்டத்தின் முதல் வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்தார்.

அதேபோன்று, தமிழர்களின் உரிமை போராட்டம் வேறு வடிவத்தில் இனி தொடரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் குறிப்பிடுகின்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி