இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு பாடசாலை மாணவர்களை அழைப்பது தொடர்பில் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அணிவகுப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாடசாலை மாணவர்களை பயன்படுத்த கல்வி அமைச்சின் செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது அவர்களை ஆபத்தில் தள்ளும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என, "73ஆவது சுதந்திர தின அணிவகுப்புக்கு மாணவர் படையை பங்கேற்கச் செய்தல்" என்ற தலைப்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி.கே.பெரேரா ஜனவரி 20ஆம் திகதி அனுப்பி வைத்துள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”தற்போதைய கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுபோன்ற நீண்டகால முகாம்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின், பாடசாலை சுகாதார பிரிவு, சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவுக்கு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த கோரிக்கையை இந்த அமைச்சினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தயவுசெய்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.”

கடிதத்தின் படி, நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், 152 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 300 பாடசாலை மாணவர்கள் இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அணிவகுப்பு பயிற்சிக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கழித்து கல்வி அமைச்சு தனது முடிவை மாற்றியுள்ளது.

கல்விச் செயலாளருக்கு பதிலாக, மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் மற்றும் பின்வரும் அளவுகோல்களுக்கு உட்பட்டு மாணவர்கள் பங்கேற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

  1. சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் கடிதத்தின் நகலை கல்விச் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் அனுப்ப வேண்டும்.
  2. சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  3. சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களின் அனுமதி பெறப்பட வேண்டும்.
  4. பெற்றோரின் முழு அனுமதியை எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டும்.
  5. ஒவ்வொரு பாடசாலையின் மாணவர்களுக்கும் பொறுப்பாக ஒவ்வொரு ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும்.
  6. மாணவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனின், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஆலோசனையைப்பெற்று அதன்படி செயற்பட விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  7. இந்த திட்டத்தின் போது கொரோனா மாணவர் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

"73 வது சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது உங்கள் பொறுப்பு என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிகேடியர் பயிற்சி மூலம் பிரிகேடியர் நிர்வாகத்திற்கு அனுப்பிய தகவலுக்கு அமைய, சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி முகாம் 2021 ஜனவரி 25 முதல் பெப்ரவரி 4 வரை கொழும்பின் நாலந்தா கல்லூரி மற்றும் ஆனந்த மகளிர் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 24 முதல் மேற்கண்ட கல்லூரிகளில் முகாம்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் 300 மாணவர்களை ஒன்றிணைக்கும் பயிற்சி முகாமை நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளதோடு, பயிற்சி குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்,
அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு பாடசாலைகளில் மாணவர்களுடன் குறைந்தபட்சம் 150 ஆசிரியர்களும் முகாமிட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அவர்களை பொறுப்பேற்பது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடசாலை மாணவர்களை தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதைவிட, அவர்களை அந்த அச்சுறுத்தலில் இருந்து மீட்பதன் முக்கியத்துவத்தை ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.



Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி